தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில், குரூப் 2 தேர்வு அறிவிப்பு கடந்த டிசம்பர் 30ம் தேதி வெளியிடப்பட்டது. நகராட்சி ஆணையர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உதவி பிரிவு அலுவலர் உள்ளிட்ட 37 பதவிகள் இதில் இடம் பெற்றிருந்தன.
மொத்தம் 4,329 காலி பணியிடங்களுக்கான எழுத்து தேர்வு ஜூலை 3ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
இதற்காக 5 லட்சத்துக்கும் அதிகமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தேர்வு நெருங்கி வந்த நிலையில், தலைமை செயலக உதவிப் பிரிவு அலுவலர் 281, கருவூலம் மற்றும் கணக்குத் துறையில் கணக்காளர் 485, ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர் 1,600 என மொத்தம் 2,366 கூடுதல் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி கடந்த 11ம் தேதி அறிவித்தது.
இந்த கூடுதல் பணியிடங்களுக்கும் சேர்த்து ஜூலை 30ம் தேதி தேர்வு நடைபெறும் என்றும் அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதில் 3,475 பணி இடங்கள், எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மதிப்பெண்கள் அடிப்படையிலும், மற்ற 3,220 பணியிடங்கள் எழுத்து தேர்வு மதிப்பெண் அடிப்படையிலும் நிரப்பட உள்ளன. கூடுதல் பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் கடந்த 10 நாட்களாக வழங்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், விண்ணப்பிக்க நேற்றுடன் கடைசி நாள் என்பதால், மாவட்ட தலைமை தபால் நிலையங்கள், டிஎன்பிஎஸ்சி அலுவலகங்களில் விண்ணப்பங்களை வாங்க கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
கடைசி நாள் என்பதால் ஏராளமானோர் டிஎன்பிஎஸ்சி அலுவலகத்துக்கு வந்து, அங்கேயே விண்ணப்ப படிவங்களை பூர்த்தி செய்து வழங்கினர்.
சிலர்
http://www.tnpsc.gov.in/
என்ற இணைய தளத்திலும் விண்ணப்பித்தனர். கூடுதலாக எத்தனை பேர் விண்ணப்பித்துள்ளனர் என்ற விவரம், இன்னும் ஓரிரு நாளில் தெரிய வரும் என்று டிஎன்பிஎஸ்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment