Sunday 26 June 2011

பிரான்சில் இ.கோலி பக்டீரியா பரவியதில் பிரிட்டன் விதை நிறுவனத்திற்கு தொடர்பு

இ.கோலி என்ற பயங்கர பக்டீரியா தற்போது ஐரோப்பிய நாடுகளில் கடுமையாக பரவி வருகிறது. இந்த நுண் உயிரி மனித உடலுக்கு அபாயத்தை விளைவிப்பதாகவும் உள்ளது.


இந்த இ.கோலி பக்டீரியா முதலில் ஜேர்மனியில் பரவி அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியது. குறிப்பிட்ட வெள்ளரிக்காய் மூலம் இ.கோலி பக்டீரியா பரவியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வெள்ளரிக்காய் மற்றும் தக்காளி ஆகியவற்றை சில நாட்களுக்கு தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.

இந்த இ.கோலி பக்டீரியா பிரான்சிலும் பரவியது. இந்த பக்டீரியா பரவியதற்கு பிரிட்டனில் உள்ள ஒரு விதை தான் காரணம் என பிரான்ஸ் அதிகாரிகள் கருதுகிறார்கள். இது குறித்து அவர்கள் விசாரணை செய்து வருகின்றனர்.

பிரான்சில் போர்டக்ஸ் பகுதியில் 10 பேர் இ.கோலி பக்டீரியா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என தகவல்கள் வெளியாகி உள்ளன. பிரிட்டன் ஸ்விச் பகுதியை சார்ந்த தாம்சன் மற்றும் மார்கன் நிறுவனம் விற்ற விதையில் உருவான காய்கறிகளால் இந்த இ.கோலி பக்டீரியா பரவி இருப்பதாக பிரான்ஸ் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.

பிரிட்டனின் உணவு தர முகமையான எப்.எஸ்.ஏ இ.கோலி பாதிப்பு பிரிட்டனில் இல்லை என தெரிவித்துள்ளது. அதே போன்று சம்பந்தப்பட்ட விதை நிறுவனமும் இ.கோலி பரவலுக்கு நாங்கள் காரணம் இல்லை என தெரிவித்து உள்ளது.

ஆண்டுதோறும் தாம்சன் நிறுவனம் பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு பல ஆயிரம் விதை பாக்கெட்டுகளை ஏற்றுமதி செய்து வருகிறது. இதில் எந்த பிரச்சனையும் ஏற்படவில்லை என நிறுவன செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தங்களது தயாரிப்புகள் தரம் உயர்ந்த நிலையிலேயே உள்ளன என தாம்சன் நிறுவன இயக்குனர் பால் ஹான்ஸ்சார்ட் தெரிவித்தார்.

No comments:

Post a Comment