Sunday 26 June 2011

பாரம்பரிய தலத்தை பாதிக்கும் காற்றாலை திட்டத்தை பிரான்ஸ் நிறுத்த வேண்டும்: ஐ.நா உத்தரவு

உலக பாரம்பரிய தலத்திற்கான பட்டியலில் உள்ள மான்ட் செயின்ட் மைக்கேல் ஆலயம் நார்மாண்டி கடல் பகுதியின் பாறை தீவில் அமைந்துள்ளது.


ஐ.நா.வின் யுனஸ்கோ கலாச்சார   அமைப்பு பட்டியலில் இடம் பெற்றுள்ள இந்த ஆலயத்தின் தர நிலையை பாதிக்கும் வகையில் திட்டங்கள் மேற்கொள்ளக்கூடாது என ஐ.நா அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

அந்த பகுதியில் காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்க பிரான்ஸ் நடவடிக்கை எடுத்து வருவதை தொடர்ந்து ஐ.நா இவ்வாறு தெரிவித்துள்ளது. கடந்த 1979ஆம் ஆண்டு முதல் இந்த மான்ட் செயின்ட் மைக்கேல் ஆலயம் உலக பாரம்பரிய பட்டியலில் இருந்து வருகிறது.

யுனஸ்கோ தனது வருடாந்த கூட்டத்தை ஜீன் 29ஆம் தேதி  பாரிசில் நடத்துகிறது. இந்த கூட்டம் நடைபெறும் தருணத்தில் புகழ்பெற்ற நினைவிடத்தை பாதிக்கும் வகையில் காற்றாலை திட்டத்தை பிரான்ஸ் மேற்கொள்ள வேண்டாம் என யுனஸ்கோ அறிவுறுத்தி உள்ளது.

உலக பாரம்பரிய இடங்களை முடிவு செய்யும் கமிட்டி   பிரான்ஸ் காற்றாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளது. பாரம்பரிய தலம் குறித்த அறிக்கை அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படுகிறது. அதுவரை காற்றாலை போன்ற திட்டங்களை மேற்கொள்ளக்கூடாது என கூறப்பட்டு உள்ளது.

நார்மான்டி மற்றும் பிரிட்டன் கடலோரப்பகுதிகள் இடையே சில காற்றாலை நிறுவனங்கள் காற்றில் மின்சாரம் தயாரிக்க திட்டமிட்டு உள்ளன. ஒரு காற்றாலை திட்டத்திற்கு உள்ளூர் நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது.

100 மீட்டர்  உயரத்தில் 17 கிலோ மீட்டர் தொலைவில் 3 காற்றாலைகள் இந்த பகுதியில் அமைக்க தீவிரம் காட்டப்படுகிறது. மான்ட் செயின்ட் நினைவிடத்திற்கு ஆண்டுதோறும் 30 லட்சம் சுற்றுலாப்பயணிகள் வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment