Sunday, 26 June 2011

வருடம் முழுவதும் வாக்காளர் பெயர் சேர்க்க தேர்தல் ஆணையம் முடிவு!

இனி வருடம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் விடுபட்ட பெயர்களை சேர்க்க தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக வாக்குச் சாவடியில் புதிதாக அலுவலர்களை நியமிக்கப்பட உள்ளனர்.

கடந்த காலங்களில் தேர்தல் சமயங்களில் மட்டுமே வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டன.இதனால் பணியாளர்களுக்கு தேவையில்லாத பணிச்சுமை ஏற்பட்டது

இதை குறைப்பதற்காக ஆண்டு முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், பெயர் மற்றும் முகவரி மாற்றம் தொகுதிக்குள் இடமாற்றம் போன்ற பணிகளை மேற்கொள்ள தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இதற்காக ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் நிலையான வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக வாக்குச்சாவடி அமைந்துள்ள பகுதியை சேர்ந்த வி.ஏ.ஓக்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். அவர்களிடம் சேர்த்தல், நீக்குதல், பெயர், முகவரி மாற்றம், தொகுதிக்குள் இடமாற்றம் ஆகியவற்றிற்கான 6, 7, 8, 8ஏ படிவங்கள் தேவையான அளவு அளிக்கப்பட உள்ளன.

எனவே வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் அந்தந்த ஆண்டு ஜன.1ம் தேதி அடிப்படையாக கொண்டு 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஆண்டு முழுவதும் விண்ணப்பிக்கலாம். அதே போல் பெயர், முகவரி மாற்றம் மற்றும் தொகுதிக்குள் இடமாற்றம் சம்பந்தமாகவும் விண்ணப்பிக்கலாம்.
இறந்தவர்கள் மற்றும் தொகுதி விட்டு தொகுதி இடம் பெயர்ந்தவர்களின் பெயரும் உடனுக்குடன் நீக்கப்படும். இன்னும் ஒரு மாதத்திற்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்க்கும் பணியையும் தொடங்க உள்ளனர். நிலையான வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு மதிப்பூதியமும் தேர்தல் கமிஷனால் வழங்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment