Sunday 26 June 2011

அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றம்- தயாநிதி மாறன் நீக்கப்படுகிறார்?

டெல்லி: பிரதமர் மன்மோகன் சிங் அமைச்சரவை மாற்றத்திற்குத் தயாராகி விட்டார். அடுத்த வாரம் அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என்று தெரிகிறது. அமைச்சரவை மாற்றத்தின்போது ஜவுளித்துறை அமைச்சர் தயாநிதி மாறன் கழற்றி விடப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் லேட்டஸ்டாக சிக்கியிருப்பவர் தயாநிதி மாறன். அவருக்கு எதிரான வலுவான ஆதாரங்கள் சிபிஐ வசம் சிக்கியுள்ளதாக தெரிகிறது. ஏர்செல் நிறுவன முன்னாள் அதிபர் சிவசங்கரன் கொடுத்த வாக்குமூலம் தயாநிதி மாறனுக்கு எதிராக உறுதியானதாக மாறியுள்ளது. இதன் அடிப்படையில் எப்ஐஆர் தாக்கல் செய்ய சிபிஐ தயாராக உள்ளது. பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதிக்காக தற்போது காத்திருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த வாரம் அமைச்சரவையை திருத்தியமைக்க திட்டமிட்டுள்ளார் பிரதமர். புதிய ரயில்வே அமைச்சர் அப்போது நியமிக்கப்படுவார். வேறு சிலரின் இலாகாக்களும் மாறும் என்று தெரிகிறது. அமைச்சரவை மாற்றத்தின்போது தயாநிதி மாறன் தூக்கி அடிக்கப்படுவார் என்றும் உறுதியான தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் தயாநிதி மாறனை விசாரிக்க சிபிஐக்கு கிரீன் சிக்னல் கொடுக்கப்படும்.

அமைச்சரவை மாற்றம் தொடர்பாக பிரதமரும், சோனியா காந்தியும் இன்று ஆலோசனை நடத்தக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தின்போது தொலைத் தொடர்புத்துறையை திமுகவுக்கு மீண்டும் காங்கிரஸ் விட்டுத் தராது. மாறாக அதுவே வைத்துக் கொள்ளும். தனியாக அதற்கு அமைச்சர் நியமிக்கப்படலாம் என்று தெரிகிறது. அதேபோல ரயில்வே அமைச்சராக திரினமூல் காங்கிரஸின் முகுல் ராய் நியமிக்கப்படலாம்.

ராகுல் காந்தி கோஷ்டியைச் சேர்ந்தவரான இளம் அமைச்சரான ஜோதிராத்தியா சிந்தியாவுக்கு கேபினட் அமைச்சர் பதவி தரப்படலாம் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment