Sunday, 26 June 2011

வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை அரசே ஏற்க குரேஷி எதிர்ப்பு

லண்டன் : தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான செலவை அரசே ஏற்றுக்கொள்ளுவதை நடைமுறைப்படுத்துவதில் எனக்கு உடன்பாடில்லை என்று இந்திய தலைமை தேர்தல் ஆணையர் எஸ்.ஒய். குரேஷி தெரிவித்தார்.


லண்டனில் இந்திய பத்திரிகையாளர்கள் சங்கம் சனிக்கிழமை ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகையில் குரேஷி இதைத் தெரிவித்தார்.
இந்தியாவில் ஆள் பலம், பண பலம் உள்ளவர்களால்தான் தேர்தலில் வெற்றி பெற முடிகிறது என்ற பரவலானக் கருத்து நிலவுகிறது. தேர்தலில் போட்டியிடும் செல்வந்தர்கள் தங்கள் வசமுள்ள கறுப்புப் பணத்தை தேர்தல் களத்தில் இறக்கிவிட்டு வெற்றியை உரித்தாக்கிக் கொள்கிறார்கள்.

இதைத் தடுக்க வேண்டுமானால் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை அரசே ஏற்க வேண்டும் என்று நீண்டகாலமாக அரசுக்கு யோசனை தெரிவிக்கப்பட்டு வருகிறது.

ஆனால் இதை நடைமுறைப்படுத்துவதில் தனக்கு துளியும் உடன்பாடில்லை என்று தலைமை தேர்தல் ஆணையர் குரேஷி கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

""இந்தியாவைப் பொறுத்தமட்டில் தேர்தலில் ஆள் பலத்தால் வெற்றி பெறுவதென்பது வரலாறாகிவிட்டது. இதைப் பற்றி நாம் கவலைப்படுவதில்லை.

இப்போதெல்லாம் தேர்தலில் பண பலம் ஏற்படுத்தும் விளைவைப் பற்றிதான் கவலைப்படுகிறோம். வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை அரசே ஏற்றுக்கொண்டுவிட்டால் இந்த நிலை மாறிவிடும் என்று கூறிவிட முடியாது. வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை அரசு ஏற்றாலும் தேர்தலில் போட்டியிடும் செல்வந்தர்கள் ஏதாவது ஒரு வழியில் தங்கள் வசம் உள்ள கறுப்புப் பணத்தை தேர்தல் களத்தில் இறக்கிவிடுவர்.

இதனால் வேட்பாளர்களுக்கான தேர்தல் செலவை அரசு ஏற்கும் விஷயத்தில் நாம் அக்கறையோ, ஆர்வமோ காட்ட வேண்டிய அவசியமில்லை. சமீபத்தில் மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளம் ஆகிய மாநிலங்களில் நடந்த சட்டப் பேரவைத் தேர்தலில் 80 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் பதிவாயின. இவர்கள் எல்லாம் பண பலத்துக்கு அடிமையாகி வாக்களித்தவர்கள் அல்ல என்பதை மறத்திடக்கூடாது.

இந்தியாவின் தேர்தல் நடைமுறை சிறப்பாக உள்ளது. இந்திய தேர்தல் நடைமுறையைப் பிற நாடுகள் பின்பற்றும் அளவுக்கு சூழ்நிலை உருவாகியுள்ளது. பிற நாடுகளுக்கு இந்திய தேர்தல் நடைமுறையை கற்றுக்கொடுக்க மத்திய அரசு தனி நிறுவனத்தைத் தொடங்கியுள்ளது.

இதில் இப்போது கென்யாவைச் சேர்ந்த தேர்தல் அதிகாரிகள் பயிற்சி பெற்று வருகின்றனர் என்றார் குரேஷி.

No comments:

Post a Comment