Friday 2 September 2011

அரசு கேபிள் டிவி சேவை ஒளிபரப்பு : ஜெ.தொடக்கி வைக்கிறார்

சென்னை: தமிழ்நாடு  அரசு கேபிள் டிவியை முதலமைச்சர் ஜெயலலிதா இன்று (செப்.2)  வீடியோ கான்பரன்சிங் மூலம் துவக்கி வைத்தார். தமிழ்நாடு அரசு கேபிள்  கார்ப்பரேஷனின் ஒளிபரப்பு தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னை கோட்டையில் நடைபெற்றது. கோட்டையில் உள்ள முதலமைச்சர் அறையிலிருந்து வீடியோ கான்பரன்சிங் மூலமாக இந்த ஒளிபரப்பை முதலமைச்சர் ஜெயலலிதா தொடங்கி வைத்து பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது: தமிழக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் கேபிள் டிவி ஒளிபரப்பை இன்று தொடங்கி வைப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.

கேபிள் இணைப்பின் மூலம் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை வழங்குவதில் ஏகபோகம் செய்து பொது மக்களிடம் அதிக கட்டணம் வசூலித்து வந்தனர். ஒரு குடும்பத்தினரின் இந்த ஏகபோக செயலினால் அதிக லாபம் ஈட்டி வந்தனர்.  எனவேதான் அதிமுக தேர்தல் அறிக்கையில் இந்த ஏகபோக நிலை தடுக்கப்பட்டு அனைவரும் கேபிள் டிவி தொழில் செய்வதற்குரிய வாய்ப்புகள் வழங்கப்படும், அனைத்து மக்களுக்கும் குறைந்த கட்டணத்தில் தொலைக்காட்சி நிகழ்ச்சி அரசு கேபிள் டிவி நிறுவனம் மூலமாக வழங்கப்படும் என்று தெரிவித்திருந்தோம்.

அந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் இன்று முதல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் ஒளிபரப்பை தொடங்குகிறது. குறைந்த செலவில் நிறைந்த சேவையினை இந்நிறுவனம் வழங்கும். தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷனுடைய உறுப்பினர்கள் மற்றும் ஆப்பரேட்டர்கள் மூலம் இந்த தொலைக்காட்சி சேவை நடைபெறும். இதற்கு சந்தா தொகையாக பொது மக்களிடம் ரூ.70 மட்டுமே வசூலிக்கப்படும்.

இதன் மூலம் அரசு கேபிள் டிவியின் இணைப்பு பெற்ற ஒவ்வொருவரும் மாதம் ரூ.70 முதல் ரூ.100 வரையிலும் சேமிக்கலாம்.

தமிழக மக்களும் குறைந்த கட்டணத்தில் இணைப்பு பெறுவதில் மனமகிழ்ச்சி அடைவார்கள்.  இந்த நல்ல நாளில் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கும் பொது மக்களுக்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.

இதையடுத்து வேலூர்  மாவட்ட கலெக்டர் நாகராஜ், அரசு கேபிள் டிவி சேவையை தொடங்குவதின் மூலம் மக்கள் மனநிறைவு அடைவதாகவும் அவர்கள் முதல்வருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார். இதையடுத்து பொதுமக்களின் சார்பாக வேலூரிலிருந்து பேசிய சுஜாதா கூறுகையில், கடந்த ஆட்சிக்காலத்தில் கேபிள் இணைப்புக்கு ரூ.100 முதல் ரூ.200 வரையிலும் கட்டணம் வசூலித்ததால் ஏழை மக்கள் பாதிப்பு அடைந்ததாக கூறினார்.

தற்போது முதலமைச்சர் கேபிள் டிவியை அரசுடமையாக்கி ரூ.70 என்ற அளவுக்கு 90 சேனல்கள் ஒளிபரப்பக்கூடிய வசதியை ஏற்படுத்தியதால் அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார்.பின்னர் வேலூர் மாவட்ட கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் சார்பில் சரவணகுமார் என்பவர் பேசும்போது, எம்எஸ்ஓக்கள் என்ற சர்வாதிகாரிகளிடமிருந்தும் கட்டண சேனல்களிலிருந்தும் கேபிள் டிவி ஆப்பரேட்டர்களுக்கு முதலமைச்சர்  பாதுகாப்பு வழங்கி இருப்பதாக தெரிவித்தார்.

கேபிள் டிவியிலிருந்த ஏதேச்சை அதிகார ஆதிக்கத்தை முறியடித்து கொத்தடிமை நிலையிலிருந்து தங்களை முதலமைச்சர் மீட்டதாக தெரிவித்த அவர், அனைத்து கேபிள் டிவி ஆப்பரேட்டர் சார்பாக நன்றி தெரிவித்துக் கொண்டார்.இறுதியில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷனின் நிர்வாக இயக்குனர் நன்றி தெரிவித்தார்.

சென்னை கோட்டையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் முதலமைச்சருடன் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தமிழ்நாடு கேபிள் டிவி கார்ப்பரேஷன் தலைவர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அரசு துறை உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.

முன்னதாக அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் சார்பாக தயாரிக்கப்பட்ட வீடியோ தொகுப்பு ஒன்று சென்னை கோட்டையில் வெளியிடப்பட்டது.  அதில் 'குறைந்த கட்டணம் நிறைந்த சேவை' என்ற வாசகங்களுடன் விளம்பரம் வெளியிடப்பட்டது.
 அரசு கேபிள் டிவி: முதல்வர் ஜேயலலிதா துவக்கி வைத்தார்

No comments:

Post a Comment