Friday, 2 September 2011

தமிழக ஆளுநராகப் பதவியேற்றார் கே.ரோசய்யா

சென்னை:தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள கே.ரோசய்யா இன்று மாலை பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.


78 வயதாகும் மூ்த்த காங்கிரஸ் தலைவர் ரோசய்யாவை தமிழக ஆளுநராக சமீபத்தில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் நியமனம் செய்து அறிவித்தார். இதையடுத்து இன்று மாலை ஆளுநர் மாளிகையில் பதவியேற்பு விழா நடைபெற்றது.

இதில் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

விழாவில் முதல்வர் ஜெயலலிதா, அமைச்சர்கள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பதவியேற்றுக் கொண்ட பின்னர் மலர்க்கொத்து கொடுத்து முதல்வர் ஜெயலலிதாவும், தலைமை நீதிபதி இக்பாலும், ஆளுநர் ரோசய்யாவை வாழ்த்தினர்.

முன்னதாக பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ரோசய்யா இன்று முற்பகல் சென்னை வந்து சேர்ந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முதல்வர் ஜெயலலிதா, சபாநாயகர் ஜெயக்குமார், அமைச்சர்கள், காவல்துறை அகாரிகள் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகைக்குப் புறப்பட்டுச் சென்றார் ரோசய்யா. அங்கும் அவருக்கு ஆளுநர் மாளிகை சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

மூத்த காங்கிரஸ் தலைவரான ரோசய்யா ஆந்திராவைச் சேர்ந்தவர். நீண்ட அரசியல் பாரம்பரியம் மிக்கவர். ஆந்திராவில் 16 முறை பட்ஜெட் தாக்கல் செய்து சாதனை படைத்தவர். பல்வேறு முதல்வர்களின் கீழ் அமைச்சராக பணியாற்றியவர். முன்னாள் முதல்வர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மறைவுக்குப் பின்னர் சில மாதங்கள் முதல்வர் பொறுப்பை வகித்தார்.

குண்டூர் மாவட்டத்தில் உள்ள வேமுரு என்ற இடத்தில் 04.07.1933-ல் ரோசய்யா பிறந்தார். அவரது தந்தையார் பெயர் சுப்பையா. நடுத்தர விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், குண்டூரில் உள்ள இந்து கல்லூரியில் வணிகவியல் இளங்கலைப் பட்டம் பெற்றுள்ளார்.
கே.ரோசய்யா, தமிழகத்தின் 24வது ஆளுநர் ஆவார். இதுவரை ஆளுநராக பணியாற்றி வந்த எஸ்.எஸ்.பர்னாலா சமீபத்தில் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment