டெல்லி பல்கலைக் கழகம், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்ளிட்ட மத்திய
பல்கலைக் கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு ஒதுக்கப் பட்ட இடங்களை
பாதியளவுக்குக்கூட நிரப்பாமல், பொதுப் போட்டிக்குக் கொண்டு போகும்
‘பார்ப்பன கொள்ளை’ நடைபெற்று வருகிறது.
2010-11 ஆம் ஆண்டில் மத்திய
பல்கலைக் கழகங்களின் கீழ் உள்ள 31 கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்டோருக்கு
ஒதுக்கப் பட்ட 7,420 இடங்களில் 3396 இடங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்ட
மாணவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது 27 சதவீத பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டில் 12 சதவீதம்
மட்டுமே. எஞ்சிய 15 சதவீத இடங்களை அப்படியே பொதுப் பட்டியலுக்கு கொண்டுபோய்
விட்டனர். மத்திய பல்கலைக்கழகங்களிலே பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத
இடஒதுக்கீடு செய்யும் சட்டம், 2006 ஆம் ஆண்டு தான் பார்ப்பனர்களின் கடும்
எதிர்ப்புக்குப் பிறகு நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் விண்ணப்பிக்க திறந்த
போட்டியில் மனு செய்வதற்கு நிர்ணயிக்கப்பட்ட மதிப் பெண்ணைவிட 10 சதவீதம்
குறைவாக நிர்ணயிக்கப்பட்டது. 2006 ஆம் ஆண்டு சட்டம் இதைத் தெளிவாகக் கூறிய
பிறகும் பல்கலைக்கழக பார்ப்பனர்கள் கேள்வி கேட்க ஆள் இல்லை என்ற
இறுமாப்பில் இதில் புதிய அளவுகோலைப் புகுத்தினர்.
இதன்படி பொதுப்
போட்டியில் சேர்க்கப்படும் மாணவர்களில் கடைசி மாணவன் பெற்றுள்ள ‘கட்-ஆப்’
மதிப்பெண்களைவிட 10 சதவீதம் குறைவாகப் பெற்றுள்ளவர்கள் மட்டுமே
பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிக்கவே முடியும் என்ற
முறையைப் புகுத்தி, பிற்படுத்தப்பட்ட மாணவர்களே மனு செய்ய விடாமல் தடுத்து
விட்டனர்.
மாணவர் சேர்க்கைக்கான குறைந்தபட்ச மதிப்பெண் என்பதற்கும், ‘கட் ஆப்’
மதிப்பெண் என்பதற்கும் வேறுபாடு உண்டு. இந்தியாவில் வறுமைக் கோட்டுக்குக்
கீழே வாழ்வோரை, அவர்களது வாழ்நிலையை வைத்துத்தான் மதிப்பிட வேண்டுமே தவிர,
டாட்டா, அம்பானியின் வருமானத்தோடு ஒப்பிட்டு, நிர்ணயம் செய்ய முடியாது.
அம்பானியின் மொத்த வருவாயில் 50 சதவீதம் குறைந்தவர்களாக இருப்பவர்களாக
இருந்தால் மட்டுமே வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கான அரசின்
சலுகைகளைப் பெற முடியும் என்று அறிவித்தால், அது கடைந்தெடுத்த கயமை அல்லவா
என்று கேட்கிறோம். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு குறைந்தது 27 சதவீத
இடங்களாவது ஒதுக்கப்பட வேண்டும் என்ற இடஒதுக்கீட்டுக் கொள்கையின்
நோக்கத்தையே இது முறியடிப்பதாகும்.
பெரியார் – தமிழ்நாட்டில் தொடங்கி வைத்த சமூகநீதி என்ற இடஒதுக்கீடு
உரிமைப் போராட்டம் மண்டல் அறிக்கை அமுலாக்கம் வழியாக இந்தியா முழுதும்
பரவினாலும்கூட அந்த உரிமைகளைப் பேணி பாதுகாத்துக் கொள்ளக்கூடிய
விழிப்புணர்வு இன்னும் வடமாநிலங்களில் வராத நிலையே தொடருகிறது. ஆனாலும்,
இப்போது டெல்லியில் விழிப்புணர்வுள்ள சமூகநீதிப் போராளிகள் வரத்
தொடங்கியிருப்பது இனியும் ஏமாற்ற முடியாது என்று பார்ப்பன ஆதிக்க
சக்திகளுக்கான எச்சரிக்கையாகும்.
டெல்லி பல்கலைக்கழகத்தில் ‘இடஒதுக்கீடு
அமுலாக்கக் குழு’ என்ற அமைப்பை சமூகநீதியாளர்கள் உருவாக்கி, இந்த
அநீதிகளுக்கு எதிராக நியாயம் கேட்கத் தொடங்கி விட்டனர்.
இந்தக் குழுவின்
சார்பிலும், டெல்லி பல்கலைக் கழகத்தில் ஆங்கிலத் துறை பேராசிரியராக
பணியாற்றும் பேராசிரியர் ஹனிபாபுவும், டெல்லி உயர்நீதி மன்றத்தில் தொடர்ந்த
வழக்கில் டெல்லி உயர்நீதி மன்றம் பிற்படுத்தப்பட்ட மாணவர் சேர்க்கையில்
தேர்வுகளில் பெறும் மதிப்பெண்கள் அடிப்படையே கவனத்தில் கொள்ள வேண்டுமே
தவிர, பொதுப் போட்டியில் இடம் பெற்றவர்களின் ‘கட் ஆப்’ மதிப்போடு இணைத்து
நிர்ணயிக்கக் கூடாது என்று தெளிவாகக் கூறிவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் அய்.அய்.டி. இயக்குனராக இருந்து ஓய்வு
பெற்றவரும், இட ஒதுக்கீட்டை ஒழிப்பதே தனது வாழ்நாள் லட்சியமாகக் கருதி
செயல்பட்டு வருபவருமான பி.வி. இந்திரேசன் என்ற பார்ப்பனர், உயர்நீதிமன்றத்
தீர்ப்பை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார்.
இந்த
வழக்கில் தங்களையும் இணைத்துக் கொள்ளுமாறு இடஒதுக்கீட்டு அமுலாக்கக்
குழுவும், பேராசிரியர் ஹனிபாபுவும் மனு செய்துள்ளனர். பொதுப் போட்டிக்கான
இடங் களை 11,957-லிருந்து 16,692 ஆக உயர்த்திக் கொண்டு விட்டனர் என்ற
அதிர்ச்சியான உண்மை, இவர்கள் தாக்கல் செய்த மனுவிலிருந்து தெரிய வருகிறது.
இந்த மத்திய பல்கலைக்கழகங்கள் பிற்படுத்தப்பட்டோருக்கான உரிமைகளை
அலட்சியப்படுத்தி புறந்தள்ளி வருவதற்கு சான்றாக மற்றொரு செய்தியும்
வெளிவந்துள்ளது. புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம்
பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நிரப்புவதற்காக ஒதுக்கப்பட்ட
நிதியை நாற்காலி, மேசைகள் வாங்குவதற்கும், வெளிநாடு களுக்கு சுற்றுலா
போவதற்கும், சர்வதேச மாநாடு களில் பங்கேற்பதற்கான செலவுக்கும்
செலவிட்டுள்ளதாக மத்திய தணிக்கைத் துறை சுட்டிக்காட்டியுள்ளது.
2005 ஆம்
ஆண்டிலிருந்து 2010 ஆம் ஆண்டு வரை பிற்படுத்தப்பட்டோர் முன்னேற்றத்தை
நோக்கமாகக் கொண்டு ஒதுக்கப்பட்ட நிதி அதற்கான நோக்கத்தில்
செலவிடப்பட்டுள்ளதா என்பதை தணிக்கைக் குழு ஆராய்ந்தபோது, இந்த உண்மைகள்
வெளிவந்துள்ளன.
பல்கலைக் கழகத்தின் 3 சிறப்பு மய்யங்கள்; இது தவிர, 8
பள்ளிகள் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டுக்காக அமைக்கப்பட்ட
சிறப்பு மய்யங்களில் தணிக்கை செய்த போது, பிற்படுத்தப்பட்டோர் நிதியை
அவர்களுக்காகப் பயன்படுத்தாமல் 26 முறைகேடான வழிகளில் திருப்பி
விடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இது தவிர, ஜவகர்லால் நேரு பல்கலையில் பணி நியமனங்களில் நடந்துள்ள
பல்வேறு முறைகேடுகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. பட்டபடிப்பு, பட்ட
மேல்படிப்புகளில் சேர்ந்த மாணவர்கள், படிப்பை முழுமையாகத் தொடராமல்
பாதியில் விட்டுச் செல்வது 35-லிருந்து 48 சதவீதம் வரை இருந்தும்
பல்கலைக்கழக நிர்வாகம், இதற்கான காரணத்தைக்கூட பரிசீலிக்காமல்
இருப்பதையும், தணிக்கை குழு வியப்புடன் சுட்டிக் காட்டியிருக் கிறது.
மத்திய பல்கலைக் கழகங்களில் பார்ப்பன ஆதிக்கம் தலைவிரித்தாடுவதும், ஆட்சி
அதிகார மய்யம் ‘அவாளிடம்’ முடங்கிக் கிடப்பதும் தான் இதற்கு அடிப்படையான
காரணம்.
மத்திய பல்கலைக் கழகங்களில் சேருவதற்கான உரிமை அனைத்து மாநில
மாணவர்களுக்கும் உண்டு. என்றாலும், உ.பி., பீகார் மாநிலங்களிலிருந்து
மட்டுமே 10,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இதர மாநிலத்திலுள்ள
மாணவர்களுக்கு இது பற்றிய தகவல்கள் தெரியாத காரணத்தால், ஏனைய 20
மாநிலங்களிலிருந்து 1000 விண்ணப்பங்கள் மட்டுமே வந்துள்ளன.
இடஒதுக்கீட்டுக்கான சட்டங்கள் வந்ததால் மட்டும் பயனில்லை. அவை
அமுலாக்கப்படுவதே முக்கியம். சட்டங்கள் வந்த பிறகும் சட்டங்களை குப்பைக்
கூடைக்குள் வீசி எறியும் ஆணவத்துடனேயே பார்ப்பனர் இப்போதும் செயல்பட்டுக்
கொண்டிருப்பதையே இது காட்டுகிறது
No comments:
Post a Comment