Wednesday 13 July 2011

மஹாராஷ்ட்ரா:ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்த நவீன பிச்சைக்காரர்கள் 43 பேர் கைது

அவுரங்காபாத்:உலகம் நவீனமயமாகும்போது நாங்கள் என்ன மோசமானவர்களா? என கேள்வி எழுப்பும் விதமாக ஜீன்ஸ் பேண்ட், டீசர்ட் அணிந்து பிச்சை எடுத்த 43 இளம்பெண்கள் மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் நகரில் கைதுச்செய்யப்பட்டனர்.


கல்லுரி மாணவிகளைப்போல ஜீன்சும், டீ சர்ட்டும் அணிந்து காலையில் சாலையில் இறங்குவார்கள். வேலை பிச்சை எடுத்தல். இவர்களிடம் சிக்குபவர்கள் பெரும்பாலும் ஆண்கள். கால்நடையாகவும், வாகனத்திலும் செல்லும் நபர்களை தடுத்து நிறுத்தி காசு கேட்பார்கள். அவர்களுக்கு தேவை சில்லரை காசுகள் அல்ல. 50 அல்லது 100 ரூபாய். தங்கியிருப்பது ஒதுக்குப்புறமான இடமோ, கோயிலோ, மரத்தடியோ அல்ல.ஹோட்டல் அறைகளில்.

மஹாராஷ்ட்ரா மாநிலம் லத்தூர் நகரில் நகரவாசிகளை ஆச்சரியப்படவைக்கும் விதமாக 43 பிச்சையெடுக்கும் பெண்கள் களமிறங்கினர். இவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஆவர். 

எங்களுடைய ஊரில் வறுமையும், பட்டினியுமாகும் நாங்கள் பிச்சை எடுக்காவிட்டால் வாழமுடியாது என இவர்கள் கூறுகிறார்கள். நாங்கள் நாட்டின் பல பகுதிகளிலும் பிச்சை எடுத்துள்ளதாகவும், பொதுமக்களோ, போலீசாரோ எவ்வித எதிர்ப்பையும் தெரிவிக்கவில்லை என நவீன பிச்சைக்காரிகள் கூறுகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு லத்தூர் நகருக்கு வந்த இப்பெண்கள் ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கியிருப்பது போலீஸிற்கு தெரியவந்தது. ஒரு இடத்திலிருந்து இத்தனை பிச்சைக்காரிகள் வந்தது போலீஸால் நம்பமுடியவில்லை. 

ராஜஸ்தான் போலீசாருடன் சேர்ந்து தகவல்களை சேகரித்துவருகின்றனர். இளம்பெண்களின் வீடு, பொருளாதார நிலை ஆகியவற்றை விசாரித்தபிறகு நடவடிக்கை எடுக்கப்படும் என லத்தூர் எஸ்.பி பி.ஜி.கய்கர் தெரிவித்துள்ளார். 

நகரவாசிகளின் புகாரைத் தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், ஆண்கள் எவரும் இல்லாதது சந்தேகத்தை ஏற்படுத்தியதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment