Saturday, 23 July 2011

இந்தியாவின் இரு (வேறுபட்ட) இஸ்லாமிய பல்கலைக்கழகங்கள்

பாகிஸ்தானும் இந்தியாவும் பிரிந்து 60 ஆண்டுகள் ஆன நிலையில் இன்று, இந்தியாவில் இஸ்லாமியக் கருத்துக்கள் குழப்பத்தில் உள்ளன.  குழப்பத்துக்குக் காரணம், இன்றைய சூழ்நிலையை இஸ்லாமை எப்படிப் பின்பற்றுவது என்பதாகவே இருக்கின்றது.


இஸ்லாமியப் பேராசிரியர் ஒருவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, “இந்தியாவில் உள்ள அனைத்து முஸ்லீம்களும், ஒருவர் பாக்கியில்லாமல் இஸ்லாமை நம்பும் ஆட்களாகவே இருக்கிறார்கள். ஆனால், இன்றைய நடைமுறை வாழ்க்கையில் இஸ்லாமியக் கொள்கைகளை எப்படிப் பின்பற்றுவது என்பதில்தான் குழப்பம் ஏற்படுகின்றது” என்றார்.

“இதை நீங்கள் நேரடியாகத் தெரிந்துகொள்ள வேண்டுமானால், இந்தியாவின் இரு பெரிய இஸ்லாமியப் பல்கலைக்கழகங்களுக்கும் ஒருமுறை நேரில் சென்று வாருங்கள். அங்கேதான், நான் குறிப்பிடும் ‘அணுகுமுறை வித்தியாசம்’ எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்பதைக் காண முடியும்” என்றும் கூறினார்.

இவர் குறிப்பிட்ட இரு இஸ்லாமியப் பல்கலைக் கழகங்களும், அலிகர் பல்கலைக்கழகம்,  தருல் உலூம் தியோபந்த் பல்கலைக்கழகம் ஆகியவையே.
இந்த இரண்டுமே, இஸ்லாமிய பல்கலைக் கழகங்கள்தான். ஆனால் ஒன்றுக்கொன்று முற்றிலும் வேறுபட்டவை. இரண்டுக்கும் அடிப்படை இஸ்லாம்தான். ஆனால், அவற்றின் அணுகுமுறைகள் வேறுபட்டவை என்பதை நேரில் காணும்போது புரிந்துகொள்ள முடிகிறது.

தியோபந்தின் செய்தி தொடர்பாளர் அடில் சித்திக், “தியோபந்தும், அலிகரும் ஒரே சம்பவங்களிலிருந்து வந்த தம்பதிகள் என்று கூட கூறலாம்” என்கிறார்.  “ஆயினும், இரண்டிற்கும் நடுவில் எல்லைக்கோடு உண்டு.” என்றும் கூறுகிறார்.

ஏன் இந்த எல்லைக்கோடு? அதுதான் 150 வருட கால குழப்பம். அதன் பின்னணியைத் தெரிந்துகொள்ள சிறிய பிளாஷ்பேக் ஒன்று.
1867ம் வருடப் போருக்குப் பின்தான், இந்தியாவில் இஸ்லாமிய இனம் சின்னாபின்னமாகியது.

ஆங்கிலேயர்கள் படிப்பதற்கும், பேசுவதற்கும் ஆங்கிலமே பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.  அதன் விளைவு பயங்கரமாக இருந்தது.  உருது மொழி வழி படித்து 100% படிப்பறிவு இருந்த இஸ்லாமிய இனம், 50 வருடங்களில் 20% படிப்பறிவாக மாறியது.  படித்த இஸ்லாமியர்கள் பெரிய பதவிகள் வகிக்கவும் தடை செய்யப்பட்டது.

அன்றைய தெற்காசியாவின் முதன்மைப் பல்கலைக் கழகமான கல்கத்தா பல்கலைக்கழகத்தில் 1858 முதல் 1878 வரை படித்த 3100 நபர்களில், 57 பேர் மட்டுமே இஸ்லாமியர்களாக இருந்தனர்.

1880களில் ஆங்கிலேயர்கள் நடத்திய கல்லூரிகளில், 25 நபர்களுக்கு 1 நபர் என்ற விகிதத்திலேயே இஸ்லாமியர்களின் படிப்பு இருந்தது.  ஹிந்துக்களும், ஆங்கிலேயர்களும் சேர்ந்து செய்த இனபிரிப்பில் இது ஏற்பட்டது என்பது உண்மைதான்.

ஆனால், அப்போது இஸ்லாமிய இனம் இந்தப் பிரச்சினையைச் சரிசெய்யாமல் பின்வாங்கியிருந்தனர்.

காலப்போக்கில் இதை மெதுவாக புரிந்து கொண்ட பின்னரே,  இஸ்லாமியர்களைக் காக்க இரண்டு இயக்கங்கள் ஆரம்பிக்கப்பட்டன.  இரு இயக்கங்களும், குரானின் அறிவே மக்களுக்கு இல்லாமல் போய்விட்டது என குற்றம் சாட்டின.

இந்த இயக்கங்களிலிருந்து, இரண்டு பெரிய இஸ்லாமிய சங்கங்கள் ஆரம்பித்தன. அவை இரண்டும் இந்தியாவில் இரு பல்கலைக் கழகங்களைத் தோற்றுவித்தன.

கய்ரோவிலுள்ள அல்-அஸார் பல்கலைக் கழகம்

ஒன்று, கய்ரோவில் (எகிப்து) உள்ள அல்-அஸார் பல்கலைகழகத்தின் இஸ்லாமிய படிப்புக்குப் போட்டியாக, வட இந்தியாவில் உருவாக்கப்பட்ட ‘தருல் உலூம் தியோபந்த்’.

மற்றொன்றுதான், இஸ்லாமிய கருத்துக்களையும், கலாசாரத்தையும் பின்பற்றினாலும், ஒரு மதச்சார்பற்ற பல்கலைக்கழகமாக விளங்கும், டில்லியின் அருகில் உள்ள “அலிகர் பல்கலைக்கழகம்”
இவற்றைத்தான் நேரில் சென்று பார்க்குமாறு கூறியிருந்தார், இஸ்லாமியப் பேராசிரியர்.

முதலில் தியோபந்த் செல்லலாம்.

நொய்டாவின் வழியாக சென்றால், புது டில்லியிலிருந்து தியோபந்தை மூன்று மணி நேரங்களில் அடைந்து விடலாம்.  முன்பு தியோபந்த் செல்லும் வழியில் இருந்த மாமரங்களை, தற்போது வியாபார கட்டிடங்களாக பார்க்க முடியும்.  வழி முழுவதும் ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ்களும், நவீன கட்டடங்களும் உள்ளன.
ஆனால் இந்த நவீனம் எல்லாமே தியோபந்தின் எல்லையை தொடும்வரைதான். தியோபந்துக்கு உள்ளே நீங்கள் நுழைந்து விட்டால், முற்றிலும் மாறுபட்ட காட்சியைக் காணலாம்.

பெரிய பல்கலைக்கழகமான அந்த இடத்தில், நாங்கள் சந்திக்க வேண்டிய சித்திக்கை தேடிக்கொண்டிருந்தோம்.  எங்கு திரும்பினாலும் தாடி வைத்த, நீண்ட சட்டையும், வெள்ளை நிறத் தொப்பியும் அணிந்தவர்களே கண்ணில் தென்பட்டனர்.  திறந்தவெளி வகுப்பறைகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் குரான் வாசிக்கும் ஒலி கேட்ட வண்ணம் இருந்தது.

எங்களது தோற்றமே, நாங்கள் அந்த இடத்துக்குப் பொருந்தாத ஆட்கள் என்பதை உணர்த்தியிருக்க வேண்டும். அதனாலோ என்னவோ, நாங்கள் வழி கேட்டபோது எங்களுக்கு சரியான பதிலே கிடைக்கவில்லை. மொழிப் பிரச்சினைவேறு இருந்தது.

கடைசியில் ஒரே ஒருவர் மட்டும் பதிலளித்தார். அவர் கேட்ட முதல் கேள்வி -  “நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள்?”

ஒரு வழியாக நாம் சித்திக்கை சந்தித்த பின்னர், அவர் எங்களை அந்த பல்கலைகழகத்தின் வளாகத்தை முழுவதுமாக சுற்றிக் காட்டினார்.
தியோபந்த், ஆண் – பெண் வேறுபாட்டில் மிகவும் பிடிவாதமாக உள்ளது.  பல்கலைக்கழகத்தில் பெண்கள் சேர அனுமதியில்லை.  “அவர்களுக்கென்று தனி பல்கலைக்கழகம் உண்டு” என்கிறார் சித்திக்.

இங்கு படித்து முடித்தவர்கள், கய்ரோவில் உள்ள அல்-அஸார் பல்கலைக்கழகம், மற்றும் சௌதி அரேபியாவில் உள்ள இஸ்லாமிய பல்கலைக்கழகத்திலும் மேல்படிப்புக்கு செல்கின்றனர். காரணம், இங்கு கற்பிக்கப்படுவது முற்று முழுதான் இஸ்லாமியப் பாணியிலான கல்வி.

எமது முதலாவது கேள்வி அவரைச் சங்கடப்படுத்துமோ என்ற பயம் இருந்தது. “தலிபான் தலைவர்களான முல்லா முஹம்மது ஓமரும் ஆஃப்கானிஸ்தானில் இது போன்ற ஒரு கல்விமுறையில்தான் முதன்முதலில் ஷாரியா வாழ்க்கை வாழ ஆரம்பித்தார். இஸ்லாமாபத்தின் சிவப்பு மசூதியும் கிட்டத்தட்ட இதுபோன்ற கல்வி முறையைத்தான் பின்பற்றுகிறது. அதே கல்விமுறைதான் இங்கும் உள்ளதா?”

ஆனால், அவர் சங்கடப்படவில்லை. “வெளிநாடு ஒன்றிலிருந்து வருபவர்கள் எல்லோருமே இதைத்தான் கேட்பார்கள்” என்றார். “எங்கள் பல்கலைக்கழகத்தில், அவர்களது முறைபோல முற்றிலும் பழமையான விதிகளை கடைபிடிப்பதில்லை. இங்குள்ள விதிமுறைகள் ஓரளவுக்கு மாடரேட் ஆனவை” என்று பதில் கூறினார்.

ஆனால், அவர்களது கல்விமுறை தவறு என்று கூறவில்லை.
“எங்களது பாடப் புத்தகங்கள்தான் அங்கும் சொல்லித் தரப்படுகின்றன.  ஆனால், அவர்கள் தீவிரவாத வழியில் செல்வது அவர்களது உள்ளூர் அரசியலாலும், பிரச்சனைகளாலும்தான். கல்விமுறைக்கும் அந்த நடைமுறைக்கும் சம்மந்தமில்லை” என்கிறார் சித்திக்.

ரியாத்திலுள்ள (சவுதி அரேபியா) கிங் சவுட் பல்கலைக் கழகம்

தியோபந்த் உருவாக்கிக் கொடுக்கப்போகும் பிரஜைகள் எப்படியிருக்கப் போகின்றார்கள் என்பதை, அங்குள்ள சூழ்நிலையை வைத்தே ஊகிக்க முடிகின்றது. அவர்கள், முற்று முழுதாக இஸ்லாமிய வாழ்க்கை முறையில் வாழப்போகும் – இடையே எந்த கம்பிரமைஸூக்கும் சம்மதிக்காத – சமூகமாக மாறுவார்கள்.

அப்படியான வாழ்க்கை முறை அவர்களைப் பொறுத்தவரை விரும்பத் தக்கதாக உள்ளது. உள்வட்டத்திலிருந்து பார்க்கும்போது, எல்லாம் சரியாகவே உள்ளன.
ஆனால் அதிலுள்ள ஒரேயொரு துரதிஷ்டம், அவர்கள் தமது திறமைகளை வெளியுலகில் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளும் சந்தர்ப்பத்தை இழக்கிறார்கள். இங்கு கல்வி பயிலும் அதியுச்ச ஐ.கியூ. உடைய ஒரு மாணவன், தனது திறமையை வைத்து சர்வதேச அளவில் வெற்றியாளனாக வருவதில்லை.

போட்டியிலிருந்து தானாகவே விலகிக் கொள்கிறான்!
இஸ்லாமிய நாடுகளுக்கு வெளியே இந்த மாணவனால் தாக்குப்பிடிக்க முடியாது. காரணம் அவனது திறமை, யூனிவர்ஸல் வியூவில் இங்கு கூர்மைப்படுத்தப் படுவதில்லை. நாசாவுக்கோ, உலக வங்கிக்கோ, ஐ.நா. பொருளாதார கமிட்டிக்கோ, மைக்ரோசாஃப்ட்டுக்கோ செல்வதற்கு இந்த மாணவன் தயார் படுத்தப்படுவதில்லை.

“அவை எதுவுமே எமக்கு தேவையில்லை. எமது உலகம் அவற்றில் தங்கியுமில்லை” என்ற சிந்தனை காணப்படுகின்றது.
மற்றைய பல்கலைக்கழகமான அலிகார், இதிலிருந்து முற்றிலும் வேறுபடுகின்றது.

இந்தப் பல்கலைக் கழகம் பற்றிய சுவாரசியமான ஒரு விஷயம் தெரியுமா?  அலிகார் பல்கலைக்கழகத்தை ஸ்தாபித்தவர் கல்வி பயின்றது, நாம் முன்னர் பார்த்த அதே தியோபந்தின் கல்வி முறையில்தான்!

அலிகாரில் 1877ல் ஆங்கிலோ – முஹம்மது ஓரியன்டல் கல்லூரியை தொடங்கியவர் சர் சையது அஹமது கான். “இந்தியாவில் முஸ்லிம்கள் வீழ்ந்ததற்கு காரணம், அவர்கள் நவீனத்தை கடைபிடிக்க மறுத்ததுதான்” என்று அவர் முழுமையாக நம்பினார்.

அவர் தனது மதத்திலிருந்து, கல்வியைப் பிரித்து நோக்கினார். தன்னுடைய பல்கலைக்கழகத்தில் ஆங்லேயர்களின் வழிப்படி கல்வி சொல்லி கொடுத்தார்.
பல்கலைக் கழகத்தை அவர் தொடங்கியபோது, இஸ்லாமிய கலாசாரம் ஒரு பாடமாக இருந்தது. அதே நேரத்தில், நவீன அறிவியலும், கணிதமும்கூட பாடங்களாகச் சொல்லிக் கொடுக்கப்பட்டன.  அனைத்தும் ஆங்கிலத்திலேயே கற்பிக்கப்பட்டன. பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள் மட்டும் முழுக்க முழுக்க இஸ்லாமிய முறையில் கட்டப்பட்டன.

அந்த நாட்களில், அவர் தனது பள்ளியை “கிழக்கு ஆக்ஸ்ஃபர்ட்” என்று அழைத்தார்.

இன்று இந்த பல்கலைக்கழகத்தில் இஸ்லாமியர்கள், ஹிந்துக்கள், ஆண்கள், பெண்கள் என அனைவரும் கல்வி கற்கின்றனர்.  இதன் சட்டம் மற்றும் மருத்துவ கல்லூரி இந்தியாவின் மிகச்சிறந்த கல்லூரிகளில் ஒன்றாக கருதப்படுகிறது.

பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் பி.கே.அப்துல் அஸீஸ், “நம்மிடம் உள்ள மதம், மொழி, கலாசாரம் போன்ற பல வேறுபாடுகளையும் கடக்க மதச்சார்பற்ற ஒரு நிறுவனமே தேவைப்பட்டது.  அதுவே ஒரு புது மதமாகியது” என்கிறார்.

இன்றைய உலகின் பொதுவான இளைய தலைமுறையை உருவாக்குவதில், இந்தப் பல்கலைக் கழகம் இந்தியாவிலுள்ள வேறு எந்தப் பல்கலைக் கழகத்திலிருந்தும் வேறுபடவில்லை. இன்னமும் கூர்ந்து பார்த்தால், எமக்கு நன்கு தெரிந்த வெளிநாட்டுப் பல்கலைக் கழகங்களுக்கும், அலிகாருக்குமிடையே பெரிதாக வித்தியாசம் ஏதும் தெரியவில்லை.

இந்தப் பல்கலைக் கழகத்திலிருந்து வெளிவந்த இஸ்லாமிய மாணவர்கள், ஐரோப்பிய ஒன்றிய திட்டக் குழுவிலிருந்து, ஆசிய அபிவிருத்தி வங்கிவரை எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். உயர் பதவிகளை வகிக்கிறார்கள்.
அவர்கள் தமது வாழ்க்கை முறையில், இஸ்லாமைப் பின்பற்றுகிறார்கள்.

நல்ல இஸ்லாமியர்களாக வாழ்கிறார்கள். ஆனால், தமது திறமையைப் பயன்படுத்தி மற்றையவர்களுடன் போட்டியிட்டு முன்னேற, அவர்களுக்கு மதம் ஒரு இடையூறாக இல்லை.

இந்தப் பல்கலைக் கழகங்கள் உருவாக்கப்பட்ட காலத்தில், இந்த இரு பல்கலைக்கழகங்களுக்கும் உள்ள மதக்கோட்பாடு வேறுபாட்டை அன்று யாரும் கவனிக்கவில்லை. பல்கலைக் கழகங்கள் ஆரம்பிக்கப்பட்டு 100 ஆண்டுகளின்பின் இப்போது, இந்த வேறுபாடு வெளிப்படையாகத் தெரியத் தொடங்குகின்றன.

இன்னும் 100 வருடங்களில் இந்த சிறிய வேறுபாடு, பெரிய மாற்றமாக மாறி, இஸ்லாமில் இருவிதமான கோட்பாடுகளை இந்தியாவில் உருவாக்கக்கூடும்.

No comments:

Post a Comment