புது தில்லி, ஜூலை 22: தமிழகத்தில் 2011-ம் ஆண்டு 17 மாவட்ட நீதிபதிகள்
நியமிக்கப்பட்டது குறித்து தொடரப்பட்ட வழக்கில் மாநில அரசு, சென்னை உயர் நீதிமன்ற
பதிவாளர், புதிதாக நியமிக்கப்பட்ட 17 நீதிபதிகளுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ்
அனுப்ப வெள்ளிக்கிழமை உத்தரவு பிறப்பித்தது.
தமிழகத்தில் 17 மாவட்ட நீதிபதிகளை நியமனம் செய்வது தொடர்பாக மாநில அரசு
2010-ம் ஆண்டு விளம்பரம் செய்தது. அந்த இடங்களுக்கு 2,047 பேர்
விண்ணப்பித்திருந்தனர். அனைவருக்கும் நுழைவுத் தேர்வு நடைபெற்றது.
இந்த நுழைவுத்
தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் நேர்காணலுக்கு 103 பேர்
தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
இவர்கள் அனைவருக்கும் 2010 நவம்பர் 11 முதல் 13 வரை நேர்காணல் நடைபெற்றது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி இக்பால் தலைமையில் 6 நீதிபதிகள்
கொண்ட குழு நேர்காணலை நடத்தியது.
அதில், 17 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக
அறிவிக்கப்பட்டனர்.
அவர்களது நியமனம் குறித்த தமிழக அரசின் அரசாணை (எண் : 16 2011) ஆளுநரின்
ஒப்புதலுடன் 2011 ஜனவரி 5- ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
இந்த நியமனத்தை எதிர்த்து மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு
தாக்கல் செய்தார்.
அதில், நீதிபதிகள் நியமனம் தொடர்பான நேர்காணலில் வழங்கப்பட்ட
மதிப்பெண்கள் விவரத்தை அளிக்குமாறு கோரினார். அவரது மனுவை சென்னை உயர் நீதிமன்றம்
தள்ளுபடி செய்தது.
இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் உச்ச நீதிமன்றத்தில் கடந்த வாரம் மேல்
முறையீடு செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் ஜெ.எம். பாஞ்சால், ஹெச்.எல். கோகலே முன்பு வெள்ளிக்கிழமை
விசாரணைக்கு வந்தது.
மனுதாரர் சார்பில் ஜி. சிவபாலமுருகன் ஆஜராகி வாதாடினார்.
நேர்காணலில் அளிக்கப்பட்ட மதிப்பெண்களின் விவரங்களைத் தெரிவிக்காதது
விதிமுறைகளுக்கு மாறானது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் அடிப்படையில்கூட
மதிப்பெண்களின் விவரங்களை சென்னை உயர் நீதிமன்றம் அளிக்க மறுத்து விட்டது.
நுழைவுத் தேர்வில் தேர்ந்தெடுக்கப்பட்டோர் பட்டியலில் 25-வது நபராக
இருப்பவருக்கு வாய்ப்பு அளிக்கப்படாமல் தர வரிசையில் 71 மற்றும் 79-வது இடத்தில்
இருந்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது என்று அவர் வாதாடினார்.
மனுதாரர் தரப்பு வாதத்தை கேட்ட நீதிபதிகள், தமிழக அரசின் தலைமைச் செயலாளர்,
சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர், 17 மாவட்ட நீதிபதிகளுக்கு நோட்டீஸ் அளிக்க
உத்தரவு பிறப்பித்தனர்.
No comments:
Post a Comment