Wednesday, 20 July 2011

தமிழக ஜனத்தொகை 7 கோடியே 21 இலட்சம்

தமிழகத்தில் நகர்ப்புறங்களின் மக்கள்தொகை வளர்ச்சி 27.16 சதவீதமாக அதிகரித்துள்ளது என்று தமிழக மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் எஸ்.கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.


தமிழகத்தில் கிராமங்கள் மற்றும் நகரங்களின் மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் பட்டியலை மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இயக்குநர் வெளியிட்டுள்ளார். இதன் பின்னர் கோபாலகிருஷ்ணன் தெரிவிக்கையில்;
மாநகராட்சி,நகராட்சி மற்றும் பேரூராட்சிகளை நகர்ப்புறங்களாகக் கணக்கெடுக்கப்படுகிறது.

இதுதவிர, 5 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட பகுதி சில இடங்களில் ஊராட்சிகளாக இருந்தும் 75 சதவீத விவசாயம் இருக்காது. இவற்றையும் நகர்ப்புறங்களாகக் கணக்கெடுக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் கிராமங்களின் எண்ணிக்கை 16,317 இலிருந்து 15,979 ஆகக் குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் 32 மாவட்டங்கள், 215 தாலுக்காக்கள், 1097 நகர்ப்புற அமைப்புகள் மற்றும் 15,979 கிராமங்களில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. 2011 ஆம் ஆண்டை 2001 ஆம் ஆண்டோடு ஒப்பிடும்போது சனத்தொகை அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் 7 கோடியே 21 இலட்சத்து 38,958 பேர் உள்ளனர். இதில் ஆண்கள் 3 கோடியே 61 இலட்சத்து 58,871. பெண்கள் 3 கோடியே 59 இலட்சத்து 80,087 பேர். கிராமப்புறங்களில் 3 கோடியே 71 இலட்சத்து 89,229 பேரும் நகர்ப்புறங்களில் 3 கோடியே 49 இலட்சத்து 49,729 பேரும் வசிக்கின்றனர். கிராமப்புறங்களில் ஒரு கோடியே 86 இலட்சத்து 63,701 ஆண்கள் உள்ளனர்.

பெண்கள் ஒரு கோடியே 85 இலட்சத்து 25,528 பேர் உள்ளனர். நகர்ப்புறங்களில் ஆண்கள் ஒரு கோடியே 74 இலட்சத்து 95,170 பேரும் பெண்கள் ஒரு கோடியே 74 இலட்சத்து 54,559 பேரும் உள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் மக்கள் தொகை வளர்ச்சி 15.60 சதவீதமாகவுள்ளது. கிராமப்புறங்களில் 6.49 சதவீதமாக உள்ளது. நகர்ப்புறங்களில் 27.16 சதவீதமாக உள்ளது.

தற்போது 2 ஆவது கட்டமாக மக்கள் தொகைக் கணக்கெடுப்புக் குறித்த விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இவை அனைத்தும் உத்தேச கணக்கெடுப்புத்தான். கணக்கெடுப்பின்போது பெறப்பட்ட அனைத்து புள்ளிவிபரங்களும் ஆய்வு செய்த பிறகு அடுத்த ஆண்டு இறுதி விபரங்கள் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment