Wednesday 20 July 2011

போலீசாருக்கு ஜிபிஎஸ் கருவி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில் போலீஸ் ஸ்டேஷன்களுக்கு செயற்கோள் உதவியுடன் இயங்கும் நவீன ஜிபிஎஸ் கருவி வழங்கப்பட்டுள்ளது. இதனால் இனி பணிக்கு செல்லாமல் போலீசார் டிமிக்கி கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடர்ந்த வனப்பகுதிகளில் பணி புரியும் வனத்துறை அதிகாரிகளுக்கு ஜிபிஎஸ் கருவி, புவி நிலை மானி வழங்கப்பட்டுள்ளது.. முக்கிய நகரங்களில் உள்ள 108 ஆம்புலன்ஸ்களில் பொருத்தப்பட்டுள்ள இந்த கருவி மூலம் ஆம்புலன்ஸ் எங்கு நிற்கிறது என்பதை சென்னையில் உள்ள கட்டுபாட்டு அறையில் அதிகாரிகள் பார்க்கலாம்.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் திருவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், திருச்சுழி, அருப்புகோட்டை, விருதுநகர் உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்ட போலீஸ் நிலையங்களுக்கு ஜிபிஎஸ் கருவி நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

திருவில்லிபுத்தூரில் நகர் போலீஸ் நிலையம், தாலுகா போலீஸ் நிலையம், மல்லி, நத்தம்பட்டி, கூமாபட்டி, கிருஷ்ணன்கோவில், வன்னியப்பட்டி, மகளிர் போலீஸ் நிலையம் என 10 போலீஸ் நிலையங்களுக்கு இக்கருவி வழங்கப்பட்டது. இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது, குற்றவாளிகளை தேடி மலையடிவார பகுதிகளுக்கு வாகனங்களில் செல்லும்போது எங்கே இருக்கிறோம் என்பதை துல்லியமாகஅறிய முடியும்.

இந்த கருவியை இன்ஸ்பெக்டர் ஜீப்பில் பொருத்துவதா, என உயர் அதிகாரிகள் ஆலோசித்து முடிவெடுப்பர் என்றனர். இதன் மூலம் போலீஸ் அதிகாரிகள் வேலை நேரத்தில் டிமிக்கி கொடுக்கவும் முடியாது. ஒவ்வொரு ஜிபிஎஸ் கருவிக்கும் அடையாள எண் கொடுக்கப்பட்டுள்ளது.

சென்னை கட்டுபாட்டு அறையில் இருந்தவாறே செயற்கோள் உதவியுடன் சம்பந்தப்பட்ட ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனம் எங்கிருக்கிறது என்பதை கண்டறிந்து விடலாம். ஆகவே வீட்டில் இருந்தபடியே குற்றவாளிகளை தேடி ஸ்பாட்டில் போய் கொண்டிருக்கிறோம் என போலீசார் முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியாது.

No comments:

Post a Comment