Wednesday 20 July 2011

ஓட்டு போட எம்பிக்களுக்கு லஞ்சம்..அமர் சிங்கை விசாரிக்க துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி

டெல்லி: மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு மீது நாடாளுமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது அரசுக்கு ஆதரவாக வாக்களிக்க எதிர்க் கட்சி எம்பிக்களுக்கு கோடிக்கணக்கில் லஞ்சம் தரப்பட்டது தொடர்பாக ராஜ்யசபா எம்பியும், முன்னாள் சமாஜ்வாடி கட்சி பொதுச் செயலாளருமான அமர் சிங்கிடம் விசாரணை நடத்த ராஜ்யசபா சபாநாயகரான துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி அனுமதி அளித்துள்ளார்.

அமெரிக்காவுடன் செய்து கொண்ட அணுசக்தி ஒப்பந்த பிரச்சனையில், இடதுசாரிகள் ஆதரவை வாபஸ் பெற்றதால், மத்திய அரசு மீது கடந்த 2008-ம் ஆண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது.

அப்போது அந்த தீர்மானத்துக்கு ஆதரவாக ஓட்டளிக்குமாறு பாஜக எம்பிக்கள் சிலருக்கு ரூ.1 கோடி வரை பணம் கொடுக்கப்பட்டது. இதை அந்த எம்பிக்கள் நாடாளுமன்றத்திலேயே கொண்டு வந்து காட்டி பரபரப்பை ஏற்படுத்தினர்.

இந்தப் புகார் குறித்து டெல்லி லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். ஆனால், வழக்குப் பதிவு செய்து 3 ஆண்டுகளுக்கு பிறகும் இந்த வழக்கில் யாரையும் கைது செய்யாதது ஏன் என்று சமீபத்தில் உச்ச நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.

இதையடுத்து இந்த வழக்கில் கடந்த 2 நாட்களுக்கு முன் முன்னாள் சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர் சிங்கின் உதவியாளர் சஞ்சீவ் சக்சேனாவை போலீசார் கைது செய்தனர்.

இந் நிலையில் இது குறித்து அமர் சிங்கிடமும் விசாரணை நடத்த டெல்லி போலீசார் முடிவு செய்தனர். இது குறித்து கருத்து கேட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு போலீஸ் தரப்பிலிருந்து கடிதம் எழுதப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினரை விசாரணை செய்ய வேண்டுமானால், சபாநாயகரின் ஒப்புதல் பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது. அமர் சிங்கை விசாரிக்க ராஜ்யசபா சபாநாயகரான துணை குடியரசுத் தலைவர் ஹமீது அன்சாரி ஒப்புதல் அளித்துள்ளார்.

இதையடுத்து விரைவில் அமர் சிங்கிடம் விசாரணை நடத்தப்படும் என்று தெரிகிறது.

No comments:

Post a Comment