Thursday 23 June 2011

சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி கொள்ளை...சென்னை தொழிலதிபர் மற்றும் ரத்னாகருக்கு சம்மன்!!

புட்டபர்த்தி: சாய்பாபாவின் தனி அறையிலிருந்த பல கோடி ரூபாய் பணம் மற்றும் விலை உயர்ந்த நகைகள் ஒரே நேரத்தில் பல்வேறு நபர்களால் கடத்தப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு பாபா அறக்கட்டளை உறுப்பினர்களே துணைபோயுள்ளனர்.



பாபாவின் பக்தர்களை இது பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் ஆசிரமம் அமைத்து ஆன்மீக பணியில் ஈடுபட்டு வந்த சத்யசாய்பாபா கடந்த மாதம் மரணம் அடைந்தார். அவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த சமயத்தில் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து லாரி மூலம் விலை உயர்ந்த பரிசுபொருட்கள் மற்றும் பணம் கடத்திச் செல்லப்பட்டதாக பக்தர்கள் புகார் கூறினார்கள். ஆனால் இதை போலீசார் கண்டுகொள்ளவில்லை.
இந்த நிலையில் சாய்பாபா ஆசிரமத்தில் இருந்து காரில் பெங்களூருக்கு கடத்தி செல்லப்பட்ட ரூ. 35 லட்சம் பணம் கொடிகொண்டா போலீஸ் சோதனையில் சிக்கியது. இதுதொடர்பாக போலீசார் கார் டிரைவர் ஹரீஸ் நந்தாரெட்டி, பொங்களுரை சேர்ந்த ஷோசன் ரெட்டி சென்னை தொழில் அதிபரின் கார் டிரைவர் சந்திரரேசன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த சோதனை நடந்த மறுநாளே புட்டபர்த்தி அருகே ஒரு சொகுசு பஸ்சில் ரூ 10 கோடி வரை ரொக்கம் கடத்தப்பட்டது. இதையறிந்த போலீசார் பஸ்சை மடக்கி அந்தப் பணத்தை பறிமுதல் செய்தனர்.

ஆனால் அதே நேரத்தில் இன்னும் பல கோடி ரூபாய் வேறு வழிகளில் கடத்தப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக ஆசிரமத்தின் தலைமை பாதுகாப்பு அதிகாரி பிரதானிடம் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். பின்னர் அவர் மாலை விடுவிக்கப்பட்டார். இதுபற்றி ராயலசீமா ஐ.ஜி. சந்தோஷ் மெஹ்ரா கூறுகையில், "சாய்பாபா ஆசிரமத்தில் பல கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது இப்போது ஊர்ஜிதமாகியுள்ளது.

இதுபற்றி போலீசார் 379-ன் பிரிவின் (திருட்டு) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளோம் ரூ.35 லட்சம் கடத்தியது பற்றி நாங்கள் நடத்திய விசாரணையில் பல்வோறு தகவல்கள் தெரியவந்துள்ளது.

அதில் உள்ள ஆயிரம் ரூபாய் கட்டுகள் கொண்ட பணம் 2010-ம் ஆண்டு மே மாதம் 14-ந் தேதி ஐதராபாத் பஞ்சகுட்டா பகுதியில் உள்ள கனர வங்கியில் எடுக்கப்பட்டுள்ளது. 500 ரூபாய் கட்டுகள் ஐதராபாத் ஐசிசிஐ வங்கியிலும் எச்.டி.எப்.சி. வங்கியில் இருந்து 100 ரூபாய் கட்டுகளும் ஒரு வருடத்திற்கு முன்பு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை தொழிலதிபர் மற்றும் ரத்னாகருக்கு தொடர்பு

இப்பணத்தை பக்தர்கள் எடுத்து சாய்பாபாவுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளனர். அந்த பணத்தைதான் 3 பேரும் திட்டமிட்டு பெங்களூருக்கு கடத்தியுள்ளனர்.

இந்த கொள்ளை சம்பவத்தில் சாய்பாபா அறக்கட்டளை நிர்வாகிகள் 2 பேருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களில் ஒருவர் சென்னை தொழில் அதிபர். இன்னொருவர் சாய்பாபா சகோதர் மகன் ரத்னாகர். இருவருக்கும் சம்மன் அனுப்பி உள்ளோம்.

இதுவரை அவர்கள் விசாரணைக்கு வரவில்லை. இதனால் எங்களுக்கு அவர்கள் மீது மேலும் சந்தேகம் அதிகரித்துள்ளது," என்றார்.

காரில் கடத்தப்பட்ட ரூ.35.53 லட்சம் பணத்தை போலீசார் அனந்தபுரம் கோர்ட்டில் ஒப்படைத்தனர். பின்னர் அப்பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் செலுத்தப்பட்டது.

இந்நிலையில் ரூ.35 லட்சம் கொள்ளை வழக்கில் கைதான ஷோகான் ரெட்டி, ஹரீஷ்நந்தா ரெட்டி இருவரும் நேற்று இந்துபுரம் கோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தனர். வழக்கை விசாரித்த நீதிபதிகள் இருவரது ஜாமீன் மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

உறவினர்கள் புகார்

சத்யசாய்பாபா சகோதரி மகன் சங்கர் ராஜு புட்டபர்த்தியில் நிருபர்களிடம் கூறுகையில், "சாய்பாபா அறக்கட்டளை உறுப்பினர்கள் மீது எங்களுக்கு தொடக்கத்தில் இருந்தே நம்பிக்கை இல்லை. சாய்பாபா மருத்துவமனையில் இருந்தபோது அவரைப் பார்க்க எங்களுக்கு அனுமதி அளிக்க மறுத்து விட்டனர்.

சாய்பாபா ஆசிரமத்தில் நடந்துள்ள கொள்ளைச் சம்பவம் எங்களை கடுமையாக பாதித்துள்ளது. போலீசார் தீவிர விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும். சாய்பாபாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட சமயத்தில் கோடிக்கணக்கான ஆபரணங்கள் கடத்தப்பட்டதாக பக்தர்கள் எங்களிடம் கூறினார்கள்.

No comments:

Post a Comment