சென்னை: புதிய தலைமைச் செயலக கட்டுமானப் பணியில் நடந்துள்ளதாக கூறப்படும் முறைகேடுகள் குறித்து நீதி விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பான விசாரணை அறிக்கை 3 மாதங்களில் தாக்கல் செய்யப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டுள்ளதாவது:
சென்னை அண்ணாசாலையில் உள்ள ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள புதிய தலைமை செயலக கட்டிடப் பணிகளுக்கு கூடுதலான செலவு, முறைகேடு காரணமாக அரசு கஜானாவுக்கு இழப்பு, இந்தப் பணிகளுக்கு சட்டப்பூர்வ அனுமதிகளும் மற்றும் ஒப்புதல்களும் பெறப்பட்டனவா?, காலதாமதம், கட்டுமானத்தில் குறைபாடு போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் அரசின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதைத்தொடர்ந்து, இதை பொதுமுக்கியத்துவம் வாய்ந்த பிரச்சினையாக கருதி, மேற்கண்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்துவதற்காக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டிய தேவை இருப்பதாக அரசு கருதுகிறது. அந்த அடிப்படையில், ஓய்வுபெற்ற சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.தங்கராஜ் தலைமையில் ஒருநபர் விசாரணை கமிஷன் அமைக்கப்படுகிறது.
புதிய தலைமை செயலக கட்டிடப் பணிக்கு கூடுதல் செலவு செய்யப்பட்டதா? அதில் நடந்த முறைகேடுகள் காரணமாக அரசு கஜானாவுக்கு இழப்பு ஏற்பட்டதா? கட்டுமானப் பணிகளுக்கு சட்டப்பூர்வமான அனைத்து அனுமதிகளும் மற்றும் ஒப்புதல்களும் பெறப்பட்டனவா? கட்டுமானத்தில் குறைபாடுகள் இருக்கிறதா? கட்டுமானப் பணியில் தேவையற்ற காலதாமதம் ஏற்பட்டதா? என்பது குறித்து இந்தக் குழு விசாரணை நடத்தும்.
மேலும், புதிய தலைமை செயலக கட்டுமானப் பணிகளில் அரசு அதிகாரிகள் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தினார்களா? தவறு ஏதும் செய்தார்களா? என்றும் இந்த குழு விசாரிக்கும். இந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், எதிர்காலத்தில் இதுபோன்ற தவறுகள் நடைபெறாமல் தடுக்க தகுந்த வழிமுறைகளை இந்த குழு பரிந்துரைக்கும். இந்தக் குழு 3 மாதங்களில் விசாரணை முடித்து அரசிடம் அறிக்கை சமர்ப்பிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக அரசு அமைந்ததும் தலைமைச் செயலகம் மற்றும் சட்டசபையை மீண்டும் புனித ஜார்ஜ் கோட்டைக்கு மாற்றியது. மேலும் புதிய தலைமைச் செயலகம் கட்டுமானப் பணிகள் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் அரசு அறிவித்தது நினைவிருக்கலாம்.
No comments:
Post a Comment