Tuesday, 14 June 2011

மதுரை அரசு மருத்துவமனையில் 100 குழந்தைகளை திருடிய கும்பல்-பெண் ஊழியர் உடந்தை!

மதுரை: மதுரை அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளை திருடி விற்ற புரோக்கரையும் அவருக்கு உடந்தையாக இருந்த அரசு மருத்துவமனை பெண் ஊழியரையும் போலீசார் கைது செய்தனர்.




மதுரை அரசு மருத்துவமனை பிரசவ வார்டில் அடிக்கடி குழந்தைகள் திருட்டு போவதாக எழுந்த புகாரை அடுத்து அவற்றை கட்டுப்படுத்தும் வகையில் இரண்டு நாட்களாக அண்ணாநகர் போலீசார் சாதாரண உடையில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.



அப்போது, மதுரை சுடுதண்ணீர் வாய்க்கால் பகுதியை சேர்ந்த புரோக்கர் சுப்பிரமணி (65) போலீசிடம் சிக்கினார். விசாரணையில், சென்னையை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் மனைவி கற்பகம் என்ற பெண்ணிடம் ஆண் குழந்தை திருடி தருவதாக கூறி, ரூ.7 ஆயிரம் வாங்கி இருப்பது தெரியவந்தது. மேலும் அரசு மருத்துவமனை பெண் ஊழியர் அமுதவல்லி என்பவருக்கும் குழந்தை கடத்தலில் தொடர்பு உள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இருவரையும் போலீசார் கைது செய்தனர்.


25 ஆண்டுகளாக திருட்டு


குழந்தை கடத்தல் பற்றி சுப்பிரமணி போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார். அப்போது அவர் கூறியதாவது:-


கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக அரசு மருத்துவமனையில் குழந்தைகளை திருடி விற்று வந்து உள்ளேன். இதுவரை சுமார் 100-க்கும் மேற்பட்ட பச்சிளங் குழந்தைகளை வார்டில் இருந்து திருடி விற்றுள்ளேன்.


என்ஜினீயரிங் மாணவி ஒருவருக்கு பிறந்த குழந்தையை திருடி கூடல்புதூர் பகுதியை சேர்ந்த ஒரு டாக்டருக்கு விற்றேன். சமீபத்தில் அந்த டாக்டர் இறந்து விட்டார். அதன்பின் அந்த குழந்தை என்ன ஆனது என்று தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


யார் யார் சிக்குவார்கள் ?


புரோக்கர் சுப்பிரமணியின் வாக்குமூலம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது வாக்குமூலத்தையடுத்து குழந்தைகளை வாங்கியவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் சிக்குவார்கள் என்று தெரிகிறது.


புரோக்கர்கள் ஓட்டம்


போலீசார் தரப்பில் கூறும் போது, `இவர் ஒரு நபராக இத்தனை குழந்தைகளை கடத்தி விற்று இருக்க முடியாது. இவருக்கு உதவியவர்கள் யார், யார்? பின்னணி என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறோம்' என்றனர். இதற்கிடையில், குழந்தைகள் திருட்டை ஒழிக்கவும், புரோக்கர்களை தடுக்கவும் ஆயுதப்படை போலீசார் 10 பேர் தினமும் மதுரை பெரிய மருத்துவமனையில் சாதாரண உடையில் ரோந்து சுற்றி வருகின்றனர். இதனால் புரோக்கர்கள் நடமாட்டம் குறைந்துள்ளது.

No comments:

Post a Comment