Tuesday 14 June 2011

சிறுமி கொலை: சிபி-சிஐடி விசாரணைக்கு மாயாவதி உத்தரவு

லக்னோ ஜூன் 13: உத்தரப்பிரதேச மாநிலத்தில் காவல் நிலைய வளாகத்தில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட புகார் குறித்து சிபி-சிஐடி விசாரணைக்கு, முதல்வர் மாயாவதி உத்தரவிட்டுள்ளார்.


உத்தரப் பிரதேச மாநிலம் லகிம்பூர் மாவட்டத்தில், 14 வயது சிறுமியை கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணவில்லை. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் தேடிவந்தனர்.



இந்நிலையில், நிஹாசன் காவல் நிலைய வளாகத்தில் அச்சிறுமியின் சடலம் தூக்கில் தொங்கியது. தனது மகளை பாலியல் பலாத்காரம் செய்து, கொலை செய்துவிட்டதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டினர்.


உண்மைக் குற்றவாளிகளை மாநில அரசு மறைப்பதாகவும், நீதிவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்று, உத்தரப்பிரதேச மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர், ரீட்டா பகுகுணா, பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் கல்ராஜ் மிஸ்ரா உள்ளிட்டோர் வலியுறுத்தி வந்தனர். எதிர்கட்சிகளின் நிர்பந்தம் காரணமாக, சிபி-சிஐடி விசாரணக்கும், மறுபிரேத பரிசோதனைக்கும் முதல்வர் மாயாவதி திங்கள்கிழமை உத்தரவிட்டார்.


சாட்சியங்களை அழித்தல் போன்ற நடவடிக்கைகளுக்காக, சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 2 போலீஸôர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஆணையர்,பிரசாந்த் திரிவேதி தெரிவித்தார்.


இதுகுறித்து விசாரணை நடத்த தேசிய மனித உரிமைகள் ஆணையம், உண்மை கண்டறியும் குழுவை அனுப்ப முடிவெடுத்துள்ளது. மேலும், 4 வாரத்துக்குள் விரிவான அறிக்கை அளிக்க மாநில டிஜிபிக்கு நோட்டீஸ் அனுப்பவும் அது திட்டமிட்டுள்ளது.

No comments:

Post a Comment