Tuesday, 14 June 2011

இணைகின்றன மார்க்சிஸ்ட்-இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள்!

ஹைதராபாத்: கடந்த மக்களவைத் தேர்தலிலும், சமீபத்திய சட்டமன்றத் தேர்தலில் மேற்கு வங்கத்திலும், கேரளத்திலும் படுதோல்வியை சந்தித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளை ஒன்றாக இணைக்க இடதுசாரிக் கட்சித் தலைவர்கள் முடிவு செய்துள்ளனர்.


எதற்காக தனித்தனியாக கட்சி நடத்துகிறோம் என்ற காரணமே தெரியாத கட்சிகள் இவை இரண்டும். வழக்கமாக எல்லா பிரச்சனைகளிலும் இரு கட்சிகளுக்கும் ஒரே நிலை தான். தேசிய அளவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எந்த முடிவை எடுத்தாலும் அதை இந்திய கம்யூனிஸ்ட் ஆதரிக்கும்.

அதே நேரத்தில் தமிழகம் போன்ற சில மாநிலங்களில் மாநிலத் தலைவர்கள்-மாநில நிர்வாகிகளின் நிலையைப் பொறுத்து எப்போதாவது கூட்டணி விஷயத்தில் இவை இரண்டும் தனித்தனியான நிலையை எடுக்கும். மற்றபடி கொள்கைகள், கோட்பாடுகள், திட்டங்கள் எல்லாமே இரு கட்சிகளுக்கும் பொதுவானவையே.

மேற்கு வங்கத்திலும் கேரளத்திலும் திரிபுராவிலும் இந்த இரு கட்சிகளும் கூட்டு சேர்ந்தே ஆட்சியை அமைத்து வந்தன. மக்களவைத் தேர்தல்களையும் கூட்டாகவே சந்தித்தன.

இந் நிலையில் கடந்த 2009ம் ஆண்டு முதல் இரு கட்சிகளும் மிக வேகமான சரிவுப் பாதையில் சென்று கொண்டுள்ளன. 2004 மக்களவைத் தேர்தலில் 55 இடங்களில் வென்று வரலாறு காணாத புரட்சியை ஏற்படுத்திய இந்தக் கட்சிகள், கடந்த மக்களவைத் தேர்தலில் வரலாறு காணாத தோல்வியை சந்தித்தன.

சமீபத்திய சட்டசபைத் தேர்தலில் மேற்கு வங்கத்தில் 25 ஆண்டுகளுக்கு பின் ஆட்சியை இழந்தன. கேரளத்திலும் தோற்றன. இப்போது திரிபுராவில் மட்டுமே இந்தக் கூட்டணி ஆட்சியில் உள்ளது.

உலகத்தின் பாதி நாடுகளை ஆண்ட கம்யூனிஸம் இப்போது கியூபாவிலும் சில தென் அமெரிக்க நாடுகளிலும் இந்தியாவில் திரிபுராவிலும் மட்டுமே ஆட்சியில் உள்ளது.

இந் நிலையில் தேர்தல் தோல்வி குறித்து ஆராய இக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில் கட்சிகளை இணைப்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்தில் ஆந்திர பத்திரிகையாளர் சங்கத்தில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவரான சீதாராம் யெச்சூரி கூறுகையில், கம்யூனிஸ்ட் கொள்கைகள் மீது ஆர்வமுள்ளவர்கள் இரு கட்சிகளும் ஒன்றாக இணைக்கப்படுவதை தொண்டர்களும் இரு கட்சிகளின் தலைவர்களும் விரும்புகிறார்கள்.

அவர்களின் எதிர்பார்ப்பு விரைவில் பூர்த்தியாகும். விரைவில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் இணைக்கப்படும் என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைவதை நாங்கள் எப்போதுமே ஆதரித்தே வந்துள்ளோம். ஆனால், இணைப்பு ஏற்பட மேலும் பல காலமாகும் என்றார்.

No comments:

Post a Comment