Friday, 22 July 2011

லோக் ஆயுக்தவும் லோக்பாலும்!

குழாயடிச் சண்டை என்று ஒன்றுண்டு. ஒரு குடம் தண்ணீரை யார் பிடிப்பது என்கிற சண்டையில் இரு வீட்டு ரகசிய விவகாரங்கள் நாற்சந்திக்கு வரும். அந்த மாதிரியான குழாயடிச் சண்டையைத்தான் இப்போது மழைக்காலக் கூட்டத் தொடருக்கு முன்பாகவே சூடாகக் கிளப்பியுள்ளன பாஜகவும் காங்கிரசும்.

கர்நாடக லோக் ஆயுக்த நீதிபதி சந்தோஷ் எச். ஹெக்டே தனது அறிக்கையை திங்கள்கிழமைதான் சமர்ப்பிக்கப் போகிறார் என்றாலும், இப்போதே அந்த அறிக்கையின் விவரங்கள் வெளியுலகுக்குக் கசிந்துவிட்டது. எப்படித்தான் எல்லா அறிக்கைகளும் தானாகக் கசிகின்றனவோ, கடவுளுக்குத்தான் வெளிச்சம். அறிக்கைகள் வேண்டுமென்றே கசியவிடப் படுகின்றனவோ என்று சந்தேகப்படுவதில் நியாயம் உண்டு.

ஹெக்டே தானும் தன் பங்குக்கு, ""இந்த அறிக்கையின் சாரமாக, முதல்வர் மீது குற்றச்சாட்டை மெய்ப்பிக்கும் மிகப்பெரும் ஆதாரங்களை அறிக்கையில் தெரிவித்துள்ளேன். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் மாநில அரசுக்குக் கடந்த 14 ஆண்டுகளில் ரூ.1,800 கோடி இழப்பு'' என்று பேட்டி அளித்துள்ளார். நம்மால் பொறுப்பான, நேர்மையான நீதிபதி என்று கருதப்படும் ஹெக்டேயின் செயலைக் குறை கூற இயலாது.

லோக் ஆயுக்த தெரிவித்துள்ள அறிக்கையை முழுதாகப் பார்க்காமல் இதுபற்றி எந்தக் கருத்தும் சொல்ல முடியாது என்று பாஜக கூறினாலும்கூட, காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட ஏனைய கட்சிகள், எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று கோரிக்கையை வைத்துள்ளன.

மழைக்காலக் கூட்டத் தொடரில் மிக முக்கியமாகப் பேசப்படும் விவகாரமாக லோக்பால் மசோதா இருக்கப் போகிறது. இதில் குறிப்பாக, சட்ட வரம்புக்குள் பிரதமரைக் கொண்டுவர வேண்டும் என்ற கருத்து மீண்டும் விவாதிக்கப்படும். இந்த விவாதத்தில் பாரதிய ஜனதா தீவிரமாக இறங்கினால், அதன் ஆவேசத்தைக் கட்டுப்படுத்த கர்நாடக முதல்வர் எடியூரப்பா தொடர்பான ஊழல் அவிழ்த்துவிடப்படும். என் வீட்டுக் குப்பையைக் கிளறினால் உன்வீட்டு விவகாரத்தை வீதியில் கொட்டுவேன் என்பதை ஆளும்கட்சி அதன் பாணியில் சொல்லியிருக்கிறது.

கர்நாடகத்தில் இரும்புத் தாது வெட்டியெடுக்கும் கனிமச் சுரங்க உரிமங்கள் வழங்கப்பட்டதில் மிகப்பெரும் ஊழல் நடைபெற்றுள்ளது என்பதை நீதிபதி ஹெக்டே கண்டுபிடித்துச் சொல்ல வேண்டிய அவசியமே இல்லை. இதில் ரெட்டி சகோதரர்களுக்கு இருக்கும் பலமும், இதனால்தான் கர்நாடக அரசு நம்பிக்கையில்லா தீர்மானத்தைச் சந்திக்க வேண்டிவந்தது என்பதும் அனைவருக்கும் தெரியும். கர்நாடக மாநிலத்தில் பெல்லாரி மக்களவைத் தொகுதியில் சோனியா காந்தியை எதிர்த்து பாஜக தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் பல ஆண்டுகளுக்கு முன்பு போட்டியிட்டபோது அவரது வெற்றிக்காகப் பாடுபட்ட ரெட்டி சகோதரர்கள், மிகப்பெரிய தொழிலதிபர்களான கதை இப்போது கர்நாடகத்தில் ஊரறிந்த ரகசியம். இதனால்தான் ரெட்டி சகோதரர்களை இன்னும் எடியூரப்பாவின் அதிகாரத்தால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்றும் சொல்லப்படுகிறது. இத்தனைக்குப் பிறகும் அவரை பாஜக, முதல்வர் பதவியில் இருந்து நீக்கவில்லை.

அடுத்ததாக, பெங்களூரில் முக்கிய பகுதியில் அரசு நிலத்தைக் குறைந்த விலைக்கு மகனுக்கும் உறவினர்களுக்கும் விற்றார் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அதை ஒப்புக்கொண்டு, தவறைத் திருத்தினார் எடியூரப்பா. இவ்வளவு வெளிப்படையாக வேறு வழியில்லாமல் ஒப்புக்கொண்ட பின்னரும் அவரை அப்பதவியிலிருந்து நீக்கவில்லை பாரதிய ஜனதா. இப்போது இந்த லோக் ஆயுக்த அறிக்கைக்காக பாஜக தலைமை அசந்துவிடப் போகிறதா என்ன?

லோக்பால் மசோதா விவகாரத்தில் ஆவேசப்படாமல், கொஞ்சம் அடக்கி வாசிக்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது பாஜக. கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று காட்டிக்கொள்ள மதச்சார்பற்ற ஜனதா தளத் தலைவர் குமாரசாமி முதல்வராக இருந்த காலம் முதலாக இந்த கனிமச் சுரங்க ஊழலைத் தோண்டியெடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை பாஜக முன்வைக்கக் கூடும்.

சரி, கர்நாடக முதல்வர் எடியூரப்பாவை இந்த முறையாகிலும் பதவியிலிருந்து நீக்கிவிடுவார்களா என்று கேட்டால், நிச்சயமாக இல்லை என்று சொல்லிவிடலாம். எடியூரப்பா விவகாரம் எல்லாமும் பாஜகவுக்கு மரத்துப்போய்விட்டது. எடியூரப்பாவை பதவியிலிருந்து விலக்கினால், பாஜக ஆட்சி கவிழும் என்பது அவர்களுக்கு நன்றாகவே தெரியும். தென்னகத்தில் இருக்கும் தனது அரசை இழப்பதைவிட பாஜக தலைமை தனது தன்மானத்தை இழக்கத் தயாராக இருக்கிறது.

மழைக்காலக் கூட்டத் தொடருக்குப் பிறகு இந்தக் கோரிக்கையைப் பற்றிக் காங்கிரஸ் கட்சியும் கவலைப்படப் போவதில்லை, பாஜகவும் அலட்டிக்கொள்ளப் போவதில்லை. லோக் ஆயுக்த அறிக்கை பாஜகவை விமர்சிக்கவும் லோக்பால் மசோதா பிரச்னையில் பாஜக தீவிரம் காட்டாமல் இருக்கவும் காங்கிரஸýக்குப் பயன்படும். நீதிபதி சந்தோஷ் எச். ஹெக்டே நடத்திய விசாரணையின்மீது ஏதாவது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவரேகூட நம்பமாட்டார்.

இந்த லோக் ஆயுக்த அறிக்கையை விட்டுத் தள்ளுவோம். கர்நாடக முதல்வர் எடியூரப்பாவும் மதச்சார்பற்ற ஜனதாதளத் தலைவர் குமாரசாமியும் தாங்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று கோயிலில் சத்தியம் செய்ய வேண்டும் என்று சிறுபிள்ளைகள்போல சொல்லால் அடித்துக்கொண்டதை உண்மை என்று அவர்களும் நம்பவில்லை, மக்களும் நம்பவில்லை. இருவரும் கோயிலுக்குப் போனார்கள். சாமியும் கும்பிட்டார்கள். ஆனால், சத்தியம் செய்ய அவர்களுக்குப் பைத்தியமா பிடித்திருக்கிறது.

இதில் ஆளுங்கட்சியாவது எதிர்க்கட்சியாவது... புதிதாக ஏதாவது இயக்கம் வந்தாலொழிய ஊழலைப் பற்றி யாராவது உண்மையான அக்கறை செலுத்துவார்களா என்பது சந்தேகம்தான்.

No comments:

Post a Comment