Friday 22 July 2011

அரசு பஸ்களில் டிக்கெட் வழங்க நவீன மின்னணு கருவிக்கு ரூ.10 கோடி அனுமதி: ஜெயலலிதா

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ் நாட்டில் உள்ள அரசு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில், வழக்கமான முறையில் அச்சடிக்கப்பட்ட பயணச்சீட்டுகள் வழங்கும் முறைக்கு மாற்றாக, நேரடித் தொடர்புள்ள (ஆன்லைன்) கையடக்க மின்னணு கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கினால் பயணம் செய்பவருக்கு எளிதில் பயணச்சீட்டு வழங்கிட இயலும். அதே போன்று நடத்துனரின் பணியும் எளிதாகும்.
 
அதே சமயம், ஒவ்வொரு பேருந்துகளிலும் வழங்கப்பட்ட பயணச்சீட்டுகள் பற்றிய விவரங்கள், பணிமனைகள், மண்டல அலுவலகங்கள் மற்றும் கோட்ட அலுவலகங்களுக்கு உடனடியாக தெரிய வரும்.

மேலும், பயணச்சீட்டுகள் வழங்கும் போதே உடனடியாக ஆன்லைனில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளின் எண்ணிக்கை, பயணிகள் மேற்கொள்ளும் பயணத்தின் தூரம், பேருந்துகள் உள்ள இடம் மற்றும் பேருந்துகள் சரியான நேரத்தில் இயக்கப்படுகிறதா என்ற விவரம் ஆகியவை போக்குவரத்துக் கழக அலுவலகங்கள் மற்றும் உயர் அலுவலர்களுக்கு உடனடியாக தெரிய ஏதுவாகும்.

எனவே, பேருந்துகளில் அதிநவீன கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டுகளை வழங்கிட ஏதுவாக, முதற்கட்டமாக 5,000 மின்னணுக் கருவிகளை வாங்கிடவும், மேலும், 250 பணிமனைகள், 19 கோட்டங்கள், 6 போக்குவரத்து தலைமையகங்கள் மற்றும் சென்னையில் அமையவுள்ள மத்தியக் கட்டுப்பாட்டு அறை ஆகியவைகளுடன் இணைக்கும் வகையில் கட்டமைப்புகளை உருவாக்கிடவும் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

இந்தத் திட்டத்தை பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழு மூலம் செயல்படுத்திட முதல் அமைச்சர் ஆணையிட்டுள்ளார். இதற்காக பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழுவிற்கு 10 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை ஒப்பளித்து முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார்.

கையடக்க மின்னணுக் கருவி மூலம் பயணச்சீட்டு வழங்கும் இத்திட்டம், மைய அரசின் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து செயல்படுத்தும் திட்டமாகும். இத்திட்டத்திற்கென மத்திய அரசு 9 கோடியே 37 லட்சம் ரூபாயை வழங்கும். மாநில அரசு 10 கோடியே 30 லட்சத்து 70 ஆயிரம் ரூபாயை வழங்கும்.

பொதுமக்களுக்கு பயனளிக்கும் இத்திட்டத்தினை விரைந்து செயல் படுத்த ஏதுவாக பல்லவன் போக்குவரத்து ஆலோசனை பணிக்குழு இத்திட்டத்திற்கான கருவிகளை வாங்க ஒரு மாதத்திற்குள் ஒப்பந்தப் புள்ளிகளைக் கோரும் பணியினை மேற்கொண்டு, இந்தத் திட்டத்தை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் முதல் அமைச்சர் ஜெயலலிதா ஆணையிட்டுள்ளார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment