Friday 22 July 2011

பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அமலுக்கு வருகிறது!

டெல்லி: உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கீடு அளிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.


உள்ளாட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளில் இதுவரை பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு தான் உள்ளது. இந்நிலையில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த கோரிக்கையை ஏற்று உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கான ஒதுக்கீட்டை 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்த மத்தியமைசச்ரவை ஒப்புதல் அளித்துள்ளது. நேற்று நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில் இந்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் அம்பிகா சோனி கூறியதாவது,

உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு தான் உள்ளது. ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சி அல்லது மாநகராட்சி ஆகிய 3 அடுக்கு உள்ளாட்சி அமைப்புகளிலும் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு அளிக்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.

இதன்படி அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கபப்டும் தலைவர், உறுப்பினர் ஆகிய பதவிகளில் இனி பெண்களுக்கு 50 சதவீதம் ஒதுக்கப்படும்.

இந்த இட ஒதுக்கீடு எஸ்.சி, எஸ்.டி. பிரிவினருக்கும் பொருந்தும். இந்த 50 சதவீத ஒதுக்கீட்டில் பெண்கள் மட்டும் தான் போட்டியிட முடியும். இந்த ஒதுக்கீட்டை உறுதி செய்ய 110-வது அரசியல் சட்டத் திருத்த மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்படும்.

இதனால் இனி பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களுக்கு அதிக பதவி கிடைக்கும் என்றார்.

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் தற்போது 28 லட்சத்து 18 ஆயிரம் பிரதிநிதிகள் உள்ளனர். இதில் சுமார் 10 லட்சம் பேர் பெண்கள். இந்த புதிய ஒதுக்கீட்டால் இந்த எண்ணிக்கை 14 லட்சத்தை தாண்டும்.

இந்த ஒதுக்கீட்டுக்கான மத்திய அரசின் புதிய சட்டத் திருத்தம் வரும் 1-ம் தேதி கூடும் நாடாளுமன்றத் தொடரில் நிறைவேற்றப்படவுள்ளது. இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் தமிழகத்தில் அது அமலுக்கு வரும். எனவே, தமிழகத்தில் நடக்கவிருக்கும் உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத ஒதுக்கீடு கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment