Monday, 4 July 2011

பிரதீபா பாட்டீல் மேஜையில் நிலுவையில் 17 கருணை மனுக்கள்

டெல்லி: குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் மேஜையில் 17 மரண தண்டனைக் கைதிகளின் கருணை மனுக்கள் நிலுவையில் உள்ளதாக தகவல் அறியும் சட்டம் மூலம் தெரிய வந்துள்ளது. இதில் பெரும்பாலானவர்கள் கொலை மற்றும் கற்பழிப்பு வழக்கில் சிக்கியவர்கள்.

சுபாஷ் சந்திர அகர்வால் என்பவர் தகவல் அறியும் சட்டத்தின் கீழ் கேட்ட விவரத்திற்கு குடியரசுத் தலைவர் அலுவலகம் அளித்த பதில் வருமாறு,

கடந்த 2005-ம் ஆண்டு சமர்பிக்கப்பட்டது தான் நிலுவையில் உள்ள கருணை மனுக்களில் மிகவும் பழையது. 2011-ம் ஆண்டில் மட்டும் 6 கருணை மனுக்கள் வந்துள்ளன.

மதச்சடங்குக்காக 9 வயது சிறுமியைக் கொன்ற ஜார்க்கண்டைச் சேர்ந்த சுஷில் மர்முவின் கருணை மனு கடந்த 2005-ம் ஆண்டு முதல் நிலுவையில் உள்ளது. தனது மனைவி மற்றும் மகள்களைக் கொன்றதற்காக மரண தண்டனையை எதிர்நோக்கியிருக்கும் ஜாபர் அலியின் கருணை மனு கடந்த 2006-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி முதல் நிலுவையில் உள்ளது.

தனது குடும்பத்தைச் சேர்ந்த 13 பேரைக் கொலை செய்த குர்மீத் சிங்கின் கருணை மனு 11-12-2009 முதல் நிலுவையில் உள்ளது. கருணை மனு அளித்தவர்களில் 10 பேரின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது. கடந்த 2009-ம் ஆண்டில் மட்டும் 7 மரண தண்டனைக் கைதிகளின் தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட மகேந்திர நாத் தாஸ்(எ) கோவிந்தா தாஸின் கருணை மனுவை பிரதீபா பாட்டீல் நிராகரித்துவிட்டார். 1996-ம் ஆண்டு குவாஹாட்டி டிரக் டிரைவர்கள் சங்க செயலாளர் ஹரகந்தா தாஸ்(68) என்பவரின் தலையை துண்டித்தார் கோவிந்தா தாஸ். அவருக்கு 1997-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது செஷன்ஸ் நீதிமன்றம்.

1993-ம் ஆண்டு புது டெல்லியில் நடந்த கார் வெடிகுண்டு வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட தேவிந்தர் பல் சிங் புல்லாரின் கருணை மனுவை பிரதீபா பாட்டீல் நிராகரித்தார்.

காலிஸ்தான் கமாண்டோ படை போராளியான புல்லாருக்கு கடந்த 2001-ம் ஆண்டு தடா சட்டத்தின் கீழ் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது டெல்லி நீதிமன்றம். பல்வேறு அரசியல் கட்சிகளும், மத அமைப்புகளும் வலியுறுத்தியும் புல்லாரின் கருணை மனுவை மறுபரிசீலிக்கக் கோரி குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு எந்த விண்ணப்பமும் வரவில்லை. புல்லாரின் கருணை மனு கடந்த மே மாதம் 8-ம் அன்று நிராகரிக்கப்பட்டது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2001-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் வழக்கில் கைதாகியுள்ள அப்சல் குருவின் கருணை மனு இன்னும் குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்படாததால் அது குறி்த்து குடியரசுத் தலைவர் அலுவலகம் எதுவும் கூறவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் ராஜ்யசபாவில் அப்சல் குருவின் கருணை மனு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அப்சல் குரு வழக்கு இன்னும் பரிசீலனையில் இருப்பதால் அவரது கருணை மனுவை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கவில்லை என்று உள்துறை அமைச்சகம் பதில் அளித்தது.

13-12-2001 அன்று நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு திட்டம் வகுத்ததாக அப்சல் குரு மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 9 பேர் பலியாகினர். 2002-ம் ஆண்டு அப்சல் குருவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, அதை 2003-ம் ஆண்டு டெல்லி உயர் நீதிமன்றம் உறுதிபடுத்தியது.

கடந்த 2004-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தனஞ்செய் சாட்டர்ஜிக்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனைக்குப் பிறகு யாரையும் தூக்கிலிட வில்லை. தனஞ்செய் ஒரு பள்ளி மாணவியை கற்பழித்துக் கொன்றதற்காக தூக்கிலிடப்பட்டார்.

கருணை மனுக்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கோ அல்லது உள்துறை அமைச்சகத்திற்கோ அனுப்பி வைக்கலாம். சட்டப்பிரிவு 72-ன் படி கருணை மனுக்களை குறிப்பிட்ட காலத்திற்குள் குடியரசுத் தலைவர் பரிசீலிக்க வேண்டும் என்ற நிபந்தனை எதுவும் இல்லை.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் தனது பதவிக் காலத்தில் 2 கருணை மனுக்கள் மீது தான் முடிவு எடுத்தார். 2004-ம் தனஞ்செய் சாட்டர்ஜியின் கருணை மனுவை நிராகரித்தார். 2006-ம் ஆண்டு கேரஜ் ராமின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைத்தார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் கே. ஆர். நாராயணன் தனது பதவிக்காலத்தில் எந்த ஒரு கருணை மனுவுக்கும் பதில் அளிக்கவில்லை.

No comments:

Post a Comment