Monday, 4 July 2011

தனி தெலுங்கானா :10 எம் பிக்கள் மற்றும் 79 எம்எல்ஏக்கள் ராஜினாமா - ஆந்திராவில் நெருக்கடி

ஹைதராபாத்: தனி தெலுங்கானா மாநிலம் கோரி இன்று காங்கிரஸ் எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள், அமைச்சர்கள் சொன்னபடி தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். அதேபோல தெலுங்கு தேசம், அதிருப்தி தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளின் உறுப்பினர்களும் ராஜினாமா செய்ததால் ஆந்திராவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்கக் கோரி நீண்டகாலமாக போராட்டம் நடந்து வருகிறது. சமீப காலமாக இது உச்சத்தை எட்டியுள்ளது. இதனால் தனி மாநிலம் அமைப்பது தொர்பாக பரிசீலிப்பதாக கூறியது மத்திய அரசு. ஆனால் வழக்கம் போல பல்வேறு ஜெகஜால குழப்பத்தை ஏற்படுத்தி அதை அப்படியே கிடப்பில் போட்டு விட்டது.

இதனால் வெகுண்ட தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி மீண்டும் அதிரடி நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது. மேலும் தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.பிக்கள், எம்.எல்.ஏக்கள், எம்எல்சிக்கள் பதவி விலக வேண்டும் என்று தெலுங்கானா ராஷ்டிரிய கட்சி காங்கிரஸை நெருக்கி வருகிறது. தெலுங்கானா மக்களும் காங்கிரஸ் கட்சிக்கு நிர்ப்பந்தம் கொடுக்க ஆரம்பித்தனர்.

இதையடுத்து ஆந்திர மாநில அமைச்சர் ஜனா ரெட்டி தலைமையில் தெலுங்கானாவைச் சேர்ந்த காங்கிரஸ் சட்டமன்ற, நாடாளு்மன்ற, மேலவை உறுப்பினர்கள் கூடி அவசர ஆலோசனை நடத்தினர். அதில் ராஜினாமா செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏக்கள், 9 எம்.பிக்கள், 16 எம்எல்சிக்கள் இன்று ராஜினாமா செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.

முந்திக் கொண்ட தெலுங்கு தேசம்

இந்த நிலையில் காங்கிரஸாருக்கு முன்பாக நேற்று அதிருப்தி தெலுங்குதேசத்தைச் சேர்ந்த நான்கு எம்.எல்.ஏக்கள் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைத்து அனைவரையும் அதிர வைத்தனர்.

இவர்கள் நகம் ஜனார்த்தன் ரெட்டி குழுவைச் சேர்ந்தவர்கள் ஆவர். இவர் தவிர ஜோகு ராமண்ணா, ஹரீஸ்வர் ரெட்டி, வேணுகோபாலச்சாரி ஆகியோரும் ராஜினாமா செய்துள்ளனர்.

இதன் மூலம் தெலுங்கானா பகுதி மக்களிடையே இவர்கள் திடீர் ஹீரோக்களாகியுள்ளனர்.

சொன்னபடி விலகினர் காங்கிரஸார்

இந்த நிலையில் இன்று காலை அமைச்சர் ஜனா ரெட்டி வீட்டில் கூடிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சிக்கள் இறுதிக் கட்ட ஆலோசனையில் ஈடுபட்டனர். அதன் பின்னர் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகருக்கு அனுப்பி வைக்க முடிவு செய்தனர்.

10 எம்.பிக்கள் ராஜினாமா

தெலுங்கானாவில் மொத்தம் 12 லோக்சபா உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 9 பேர் இன்று ராஜினாமா செய்தனர்.

ராஜ்யசபா உறுப்பினர்கள் 5 பேர் உள்ளனர். இவர்களில் கேசவராவ் மட்டும் ராஜினாமா செய்துள்ளார்.

79 எம்.எல்.ஏக்கள் விலகினர்

தெலுங்கானா பகுதியில் 2 பிரஜா ராஜ்ஜியம் கட்சி உறுப்பினர்களையும் சேர்த்து காங்கிரஸுக்கு 53 பேர் உள்ளனர். இவர்களில் 42 பேர் இன்று ராஜினாமா செய்தனர். இவர்களில் 11 பேர் கிரண் குமார் ரெட்டி அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள அமைச்சர்கள் ஆவர். அதேசமயம், அமைச்சர்கள் தனம் நாகேந்தர், முகேஷ் கெளட் மற்றும் எம்.எல்.ஏக்கள் சசிதர் ரெட்டி, துணை முதல்வர் தாமோதர் ராஜா நரசிம்மா ஆகியோர் ராஜினாமா செய்ய மறுத்துள்ளனர்.

தெலுங்கானா பகுதியில் மட்டும் 15 அமைச்சர்கள் உள்ளனர். இவர்களில் 11 பேர் ராஜினாமா செய்து விட்டதால் கிரண் குமார் ரெட்டி அமைச்சரவை கடும் பாதிப்பை சந்தித்துள்ளது.

தெலுங்கு தேசம் கட்சிக்கு 37 பேர் உள்ளனர். இவர்களில் நகம் ஜனார்த்தன் ரெட்டி உள்ளிட்ட நான்கு அதிருப்தியாளர்களும் அடக்கம். அத்தனை பேரும் கூண்டோடு ராஜினாமா செய்து விட்டனர்.

மொத்தம் 10 எம்.பிக்கள், 79 எம்.எல்.ஏக்கள் இன்று ராஜினாமா செய்துள்ளனர். தெலுங்கானா பகுதியில் மொத்தம் 119 எம்.எல்.ஏக்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

எம்.எல்.ஏக்கள் அனைவரும் தங்களது ராஜினாமா கடிதங்களை சபாநாயகரிடமும், துணை சபாநாயகர் பத்தி விக்ரமர்காவிடமும் அளித்துள்ளனர்.

முதல்வர் கிரண் குமார் ரெட்டி அரசுக்கு சட்டசபையில் 154 எம்.எல்.ஏக்கள் உள்ளனர். இவர்கள் போக சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சி எம்.எல்.ஏக்கள் 18 பேரின் ஆதரவும் உள்ளது. எம்ஐஎம் கட்சிக்கு 7, சில சுயேச்சைகள் ஆகியோரும் அரசுக்கு ஆதரவாக உள்ளனர்.

ஆனால் தற்போது கணிசமான எம்.எல்.ஏக்கள் விலகியிருப்பதால் ஆட்சிக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment