பெங்களூர்:தன்னை சிறை அதிகாரிகள் மனோரீதியாகவும், உடல்ரீதியாகவும் கொடுமைக்கு ஆளாக்குவதாகவும், நோயால் பாதிக்கப்பட்ட தனக்கு சிகிட்சை வசதிகள் அளிக்கவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உத்தரவை கடைப்பிடிக்க தயாராகவேண்டும் எனவும் அப்துல்நாஸர் மஃதனி புகார் அளித்துள்ளார்.
பெங்களூர் மத்திய சிறையின் சூப்பிரண்டிற்கு இந்த புகாரை அவர் அளித்துள்ளார்.அதில் அவர் கூறியிருப்பதாவது: ஊனமுற்ற நான் நீரழிவு நோய்,உயர்ந்த இரத்த அழுத்தம்,அல்ஸர் போன்ற நோய்களால் அவதியுறுகிறேன்.
மேலும் முதுகெலும்பிற்கும், கால் மூட்டிற்கும் வேதனையின் காரணமாக கடந்த 19 வருடங்களாக ஆயுர்வேத சிகிட்சையை மேற்கொண்டுவருகிறேன்.
எனது ஜாமீன் மனுவை பரிசீலிக்கும் வேளையில் கோழிக்கோடு ஆயுர்வேத மருத்துவமனையில் நான் பெற்றுவந்த சிகிட்சையை பெங்களூர் மருத்துவமனையில் கிடைக்க செய்வோம் என அரசு வழக்கறிஞர் உச்சநீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதி கடை பிடிக்கப்படவில்லை.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றுகிறோம் என்ற பெயரில் என்னை கடந்த 26-ஆம் தேதி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுவிட்டு உடனே சிறை அதிகாரிகள் திரும்ப அழைத்து வந்து விட்டார்கள்.
போலீஸ் பேருந்தில் மருத்துவமனைக்கு அழைத்து சென்று திரும்ப அழைத்துவந்ததில் 134 கி.மீ பயணம் செய்ய நேர்ந்தது.இதனால் எனது உடல் நிலை மேலும் மோசமாகி கடுமையான உடல் வேதனையின் காரணமாக வலி நிவாரணிகளை உபயோகிக்கிறேன்.
சக்கர நாற்காலியில் பிறரின் உதவியோடு மட்டும் நகர முயலும் எனக்கு சிறையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சி.சி டி.வியின் கேமராக்கள் செயல்பட உபயோகிக்கும் பவர் அதிகமான லைட்டுகளின் காரணமாக தூக்க மாத்திரிகைகளின் உதவியின்றி உறங்க முடியாத சூழல் உள்ளது.
சிறை அதிகாரிகளின் இத்தகைய கொடுமைகளை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும்.இவ்வாறு மஃதனி புகார் மனுவில் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment