Saturday, 1 October 2011

குஜராத் கலவரத்தில் மோடியை குற்றம் சுமத்திய ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட் கைது

குஜராத் மாநில முதல்வர் நரேந்திர மோடியின் தீவிர எதிர்ப்பாளராக கருதப்பட்டவரும், அம்மாநில ஐபிஎஸ் அதிகாரியுமான சஞ்சீவ் பட், இன்று (வெள்ளிக்கிழமை) காவற்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2002 மதக்கலவரத்தின் போது, வன்முறையில் ஈடுபடுபவர்கள் குறித்து அக்கறை செலுத்த வேண்டாம் எனவும், பாதிக்கப்பட்டு உதவி கோரிய முஸ்லீம்களின் தொலைபேசி அழைப்புக்களை புறக்கணிக்க கோரியும், மோடி காவற்துறையிடம் உத்தரவிட்டதாக, சஞ்சீவ் பட் குற்றம் சாட்டியிருந்தார்.

இந்நிலையில், சஞ்சீவ் பட் ஐபிஎஸ் அதிகாரி எனும் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதாக குற்றம் சுமத்தப்பட்டு, அவரை கடந்த ஆகஸ்ட் 8ம் திகதி பதவியிலிருந்து இடை நீக்கம் செய்தது குஜராத் அரசு.

அரசு வாகனத்தை தவறாக பயன்படுத்தியது, அனுமதியின்றி விடுமுறை எடுத்தது என பல்வேறு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன.

குஜராத் கலவரம் தொடர்பில், அரசு மீது தவறான குற்றச்சாட்டுக்கள் சுமத்தி, அச்சுறுத்தி வருவதாக கூறி, அவரை காந்திநகர் காவற்துறையினர் இன்று கைது செய்துள்ளனர். எனினும் அவர் விசாரணைக்காகவே அழைக்கப்பட்டார். அவரை கைது செய்யவில்லை எனவும் கத்லோடியா காவற்துறை நிலையத்தில் அவர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு செய்திருப்பதாகவும் அக்காவற்துறை டிஜிபி சித்ரஞ்சன் சிங் தெரிவித்துள்ளார்.

2002 மதக்கலவரம், நரேந்திர மோடி மீது ஏற்படுத்திய களங்கம் இன்னமும் அகலாத நிலையில், அக்கலவரத்தின் பின்னணியை மூடி மறைப்பதற்காக இவ்வாறான திடீர் கைதுகள் இடம்பெறுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்தியுள்ளன.

கலவர வழக்குகள் தொடர்பில், புலனாய்வு குழுவினர் நடத்தி வந்த விசாரணை தகவல்கள், அரசு உயர் அதிகாரி ஒருவர் மூலமாக, மோடிக்கு தெரிவிக்கப்பட்டதாக பட், சமீபத்தில் குற்றம் சுமத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment