Wednesday 28 September 2011

சவூதி அரேபியாவில் இந்தியர்களுக்கு பொதுமன்னிப்பு: 50000 பேர் நாடு திரும்பினர்

சவூதி அரேபியாவில் விசா காலம் முடிந்த பின்னும் மறைமுகமாக வசித்து வந்த 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்களை அந்த நாடு விடுவித்தது. இதையடுத்து அவர்கள் நாடு திரும்பினர்.

எண்ணெய் வளமிக்க நாடான சவூதி அரேபியா-வுக்கு, இந்தியா உட்பட பல வெளிநாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் பலதரப்பட்ட வேலைகளுக்கு செல்கின்றனர். அவர்களுக்கு அங்கு வசிக்க குறிப்பிட்ட ஆண்டுகள், அரசு அனுமதித்து விசா வழங்குகிறது.

இதில் திறமையுள்ள மக்கள் தொடர்ந்து தங்கள் விசா காலத்தை நீட்டிக் கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் சிலருக்கு விசா காலம் நீட்டித்து கிடைக்காவிட்டாலும், தொடர்ந்து அங்கேயே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் அவ்வப்போது நடக்கும் ஆய்வுகளில் அந்நாட்டு அதிகாரிகளிடம் சிக்கி, சிறையில் அடைக்கப்படுகின்றனர்.

சமீபத்தில் இதுபோல சிறையில் அடைக்கப்பட்டவர்கள் குறித்து, இந்திய தூதரக அதிகாரிகள், சவூதி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் பயனாக, சவூதியில் சட்டத்திற்கு புறம்பாக தங்கியிருந்த 50,000க்கும் மேற்பட்ட இந்தியர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுவிக்கப்பட்டனர். அவர்கள் இந்தியாவிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

சவூதியில் பணிபுரியும் இந்தியர்களுக்கான தகவல் தொடர்பு நிலையத்தை விரைவில் துவக்கி, அதன்மூலம் வெளிநாட்டில் பணியில் உள்ள  இந்தியர்களுக்கு உதவி திட்டத்தை செயல்படுத்தி வருவதாக, இந்திய தூதரக முதன்மை செயலர் பருபால் தெரிவித்தார்.

No comments:

Post a Comment