Monday 12 September 2011

உச்ச நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள்: பெண் நீதிபதி உள்பட 3 பேர் இன்று பதவியேற்பு

டெல்லி: உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்திற்கு புதிதாக 3 நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஜே. முகோபத்யாயா, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே. எஸ். கெஹர், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ரஞ்சனா தேசாய் ஆகியோரை உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமித்து அதற்கான உத்தரவில் குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல் கையெழுத்திட்டுள்ளார்.

இவர்கள் 3 பேரும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ். ஹெச். கபாடியா முன்பு இன்று பதவியேற்கின்றனர்.

உச்ச நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ள 31 நீதிபதிகளில் இதுவரை நீதிபதி கியான் சுதா மிஸ்ரா மட்டும் தான் பெண். இனி தேசாயை சேர்த்து இரண்டு பெண் நீதிபதிகள் இருப்பார்கள்.

டெல்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் கேரள உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஜஸ்டி செலமேஸ்வர் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக்குமாறு சட்ட அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களும் விரைவில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாகவிருக்கின்றனர்.

நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த மாதத்தில் 58 வயதாகவிருக்கிறது. கடந்த 2009-ம் ஆண்டு அவர் பாட்னா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டு 2010-ம் ஆண்டு மே மாதத்தில் டெல்லி உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார். அவருக்கு இன்னும் 7 ஆண்டுகள் சர்வீஸ் பாக்கி உள்ளது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

அவ்வாறு அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியானால் ரங்நாத் மிஸ்ராவை அடுத்து இந்த பதவியை வகிக்கும் இரண்டாவது ஒரிசா மாநிலத்தவராவார்.

நீதிபதி முகோபத்யாயாவுக்கு பதில் கொல்கத்தா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பி. பட்டாச்சார்யா குஜராத் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். நீதிபதி கெஹருக்கு பதில் டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி விக்ரமாஜித் சென் கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவிருக்கிறார்.

No comments:

Post a Comment