Friday 9 September 2011

ரூ.2,160 கோடி செலவில் 311 ஏக்கரில் திருமழிசையில் துணை நகரம்

சென்னை  பெங்களூர் நெடுஞ்சாலையில் திருமழிசையில் துணை கோள் நகரம் ரூ.2,160 கோடி செலவில் 311 ஏக்கரில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா அறிவித்திருக்கிறார்.

இந்த நகரத்தில் 12 ஆயிரம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்படும்.  சென்னை அசோக் பில்லர் அருகில் 554 குடியிருப்புகள் கட்டப்படும். நந்தனத்தில் பசுமைத்திட்ட அம்சங்களுடன் 2 லட்ச சதுர அடி பரப்பளவில் 17 மாடி கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும் என்றும் அவர் அறிவித்தார். சட்டப்பேரவையில் அவை விதி 110ன் கீழ் முதலமைச்சர் ஜெயலலிதா இன்று கூறியதாவது:

சென்னை மாநகரம் வெகு வேகமாக விரிவடைந்து வருகிறது.  சென்னையில் வீட்டு மனை மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளின் விலை பெருமளவில் உயர்ந்து உள்ளது. எனவே, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் தங்களுக்கு சொந்தமாக வீடு ஒன்றை வாங்குவது என்பது கடினமானதாக உள்ளது.  இந்த நிலையைக் கருத்தில் கொண்டு, எல்லா தரப்பு மக்களுக்கும் வீடுகள் கிடைக்கும் வகையில் பல்வேறு வீட்டு வசதித் திட்டங்களை எனது தலைமையிலான அரசு செயல்படுத்த உள்ளது.

அந்த வகையில், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் செயல்படுத்தப்பட உள்ள புதிய வீட்டு வசதித் திட்டங்கள் குறித்து இந்த மாமன்றத்தில் எடுத்துரைக்க விரும்புகிறேன்.சென்னைபெங்களுர் நெடுஞ்சாலையில் உள்ள திருமழிசை அருகே,  தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்திடம் 311.05 ஏக்கர் நிலம் உள்ளது. அந்த நிலத்திற்கு முறையான அணுகு சாலை அமைப்பதற்கு தேவைப்படும் 12.87 ஏக்கர் நிலம், நிலத்தின் உரிமையாளர்களிடம் உரிய கலந்தாலோசனை செய்து பெறப்பட உள்ளது.  மேற்கண்ட நிலம் பெறப்பட்ட பின், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம் சார்பில் 2160 கோடி ரூபாய் செலவில், 311.05 ஏக்கர் பரப்பளவில், செம்பரம்பாக்கம், குத்தாம்பாக்கம், பர்வதராஜபுரம், நரசிங்கபுரம் மற்றும் வெள்ளவேடு கிராமங்களை உள்ளடக்கிய திருமழிசை துணைக்கோள் நகரம், அதாவது கூடடிணூதட்ச்த்டடிண்ச்டி குச்tஞுடூடிtஞு கூணிதீணண்டடிணீ அமைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துணைக்கோள் நகரம், குடிநீர் வசதி, கழிவுநீர் அகற்றும் வசதி, சாலைகள், மழைநீர் வடிகால், தெரு விளக்குகள், சமுதாயக் கூடம், பள்ளி, மருத்துவமனை, பேருந்து நிலையம், பூங்கா, விளையாட்டுத் திடல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளும் கொண்டு அமைக்கப்படும். 

இந்த நகரத்தில் 12,000 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டு, பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினர், குறைந்த மற்றும் நடுத்தர வருவாய் பிரிவினர் ஆகியோர் எளிதில் வாங்கக் கூடிய விலையில் வழங்கப்படும்.சென்னை அசோக் பில்லர் அருகில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்திற்கு சொந்தமான 3.73 ஏக்கர் நிலப்பரப்பில், வாரியத்திற்குத் தேவையான மர உற்பத்தி தொழிற்சாலை அமைக்கப் பெற்று, பின்னாளில் அந்தத் தொழிற்சாலை பயன்பாடு இன்றி போனதால், இந்த இடம் கடந்த சுமார் 15 ஆண்டுகளாக எவ்வித பயன்பாட்டிற்கும் உட்படாமல் இருந்து வந்தது.

சென்னை மாநகரத்தில் வீட்டுத் தேவையை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள இந்த 3.73 ஏக்கர் நிலப் பரப்பில், 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 554 குடியிருப்புகள் கொண்ட பன்னடுக்கு அடுக்குமாடி குடியிருப்புகள்            கட்டப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சென்னை கோயம்பேடு தெற்காசிய விளையாட்டு கூட்டமைப்பு கிராமத்தில் 5.6 ஏக்கர் காலி நிலம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் வசம்  உள்ளது.  இந்த நிலம், சென்னைப் புறநகர் பேருந்து நிலையத்தை ஒட்டியும்; உள்வட்டச் சாலை முகப்பிலும் உள்ளது.  தற்போது, இந்தக் காலி இடத்தில், தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் 116 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 4.66 லட்சம் சதுர அடி பரப்பளவில், பன்னடுக்கு வணிக வளாகம் ஒன்று கட்டப்படும்.  மேலும், 33 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1.44 லட்சம் சதுர அடி பரப்பளவில் 120 குடியிருப்புகள் கட்டப்படும்.  

2011 ஆம் ஆண்டு தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் பொன்விழா ஆண்டு ஆகும்.  பொன்விழா ஆண்டை முன்னிட்டு, தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் திட்டங்களின், மனை / வீடு / அடுக்குமாடி குடியிருப்பு ஒதுக்கீட்டில், மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படும் 1 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 3 விழுக்காடாக உயர்த்தி வழங்க எனது தலைமையிலான அரசு முடிவெடுத்துள்ளது என்பதை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் வசம் சென்னை, நந்தனத்தில் 15.78 மனை நிலம் உள்ளது.  நந்தனத்தில் அலுவலகக் கட்டடங்களுக்கான தேவை உள்ளது.  எனவே, தமிழ்நாடு குடிசைப் பகுதி மாற்று வாரியம் வசம் தற்போது காலியாக உள்ள இடத்தில், சுமார் 100 கோடி ரூபாய் செலவில், பசுமைத் திட்ட அம்சங்களுடன், 2 லட்சம் சதுர அடி பரப்பளவில், 17 மாடிகள் கொண்ட அலுவலக வளாகம் கட்டப்படும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

இந்தக் கட்டடத்தை அலுவலகப் பயன்பாட்டிற்காக வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு, தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்ட குடியிருப்புகளில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படும் என்பதை மன நிறைவுடன் தெரிவித்துக் கொண்டு அமைகிறேன்.இவ்வாறு முதல்வர் கூறினார்.

சபாநாயகர் ஜெயகுமார், அமைச்சர் செல்வி ராமஜெயம், சவுந்தராஜன் (சிபிஎம்), ஆறுமுகம் (சிபிஐ) ஜவாஹிருல்ல (மனிதநேய மக்கள் கட்சி) கலையரசி (பாமக) பிரின்ஸ் (காங்கிரஸ்) டாக்டர் கிருஷ்ணசாமி (புதிய தமிழகம்) செ.கு.தமிழரசன் (இந்திய குடியரசு கட்சி) ஆகியோர் முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிவிப்பை வரவேற்று பாராட்டி நன்றி தெரிவித்தனர்.

No comments:

Post a Comment