Monday, 8 August 2011

லிபியா : முக்கிய எண்ணெய் குழாய் பாதை தகர்ப்பு

லிபியாவில் முக்கிய எண்ணெய் குழாய் பாதையை போராட்டக்காரர்கள் தகர்த்தனர்.
கடாபிக்கு இந்த தாக்குதல் பலத்த அடியாக அமைந்தது. இந்த எண்ணெய் குழாய் தகர்ப்பால் தலைநகர் திரிபோலியில் பெரும் இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது.


லிபியாவில் சமீப நாட்களாக மேற்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் போராட்டக்காரர்கள் முன்னேறி வருகிறார்கள். பிர்கானம் பகுதியை கைப்பற்றி விட்டதாக போராட்டக்காரர்கள் கூறினர். இந்த பகுதி துனிஷிய மற்றும் கத்தார் ஆயுதக் கப்பல் செல்ல உதவும் கடல் வழி சாலையாகும்.

போராட்டக்காரர்களின் தாக்குதல் குறித்து லிபிய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் காலித் கய்ம் கூறுகையில்,"மின்நிலையத்திற்கு எரிபொருள் கொண்டு செல்லும் எண்ணெய் குழாய் பாதையில் போராட்டக்காரர்கள் சேதம் ஏற்படுத்தி உள்ளனர். எனவே மின் உற்பத்தி திறனில் பெரும் பாதிப்பு உள்ளது" என்றார்.

முஸ்லிம்களின் புனித மாதமான ரமலான் கடந்த வாரம் துவங்கிய நிலையில் 40 டிகிரி வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் மின்உற்பத்தி நிறுத்தம் மக்களை பெரிதும் பாதிக்கச் செய்துள்ளது.

போராட்டக்காரர்கள் எண்ணெய் குழாய் மீது பெருமளவு சிமிண்ட் பொருளை கொட்டினர். அதனை சரிசெய்ய இரண்டு நாட்கள் ஆகும் என அரசு தெரிவித்தது.

No comments:

Post a Comment