Friday 29 July 2011

லிபிய புரட்சிப்படை தளபதி படுகொலை


லிபிய புரட்சி படையின் தளபதி அப்டெல் ஃபட்டாஹ் யூனெஸ் நேற்று படுகொலை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை தேசிய புரட்சிப்படை கவுன்சில் உறுதிப்படுத்தியுள்ளது.


தாக்குதல் நடத்திய குழுத் தலைவரை தாம் கைது செய்துள்ளதாக புரட்சிப்படையின் பேச்சாளர் முஸ்தபா ஜாலில் தெரிவித்துள்ள போதும் தாக்குதல் நடத்தியவர்கள் கடாபியின் படையினரா என்பதை அவர் தெளிவாக கூறவில்லை.

ஜெனரல் ஃபட்டாஹ் யூனெஸ், கடாபி படையினருக்கு ஆதரவாக செயற்பட்டார் எனும் சந்தேகமும் சமீபகாலமாக நிலவியுள்ளது.

முன்னர், அவரும் உதவியாளர் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. ஒரு சில மணி நேரத்தில் அவர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள் என தகவல் மாறியுள்ளது.

படுகொலை செய்யப்பட்ட ஜெனரல் யூனிஸ் 1969 ம் ஆண்டு கடாபி ஆட்சியை கைப்பற்ற காரணமாகவிருந்தவர் என்பதுடன், லிபியாவின் முன்னாள் உள்துறை அமைச்சராகவும் இருந்துவந்துள்ளார். கடந்த பெப்ரவரி மாதத்திலிருந்து கடாபிக்கு எதிரான பாதையில் திசை திரும்பியதுடன், புரட்சிப்படைக்கு தலைமை வகிக்க தொடங்கினார்.

ஐந்து மாதங்களுக்கு மேலாக கடாபி படையினருடன் மோதி வரும் புரட்சிப்படையினர், லிபியாவின் கிழக்கு பகுதிகளான பெங்காஸி, மிஸ்ராட்டா நகரின் மேற்கு துறைமுக பகுதி என்பவற்றை கைப்பற்றியுள்ள போதும், தலைநகர் திரிபொலி உட்பட பெரும்பாலான மேற்கு பகுதிகளை கடாபியின் அரச படைகள் இன்னமும் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளன.

No comments:

Post a Comment