Wednesday, 1 June 2011

போராட்ட உணர்வின் நினைவிடமாக மாறிய ஷேக் யாஸீனின் வீடு


காஸ்ஸா:போராளி இயக்கமான ஹமாஸை ஊனமுற்று வயோதிக நிலையிலும் சக்கர நாற்காலியில் இருந்தபடி வழி நடத்திய ஷேக் அஹ்மத் யாஸீன் என்ற நெஞ்சுரம் மிக்க வீரரை ராக்கெட் தாக்குதலில் கொலைச் செய்தபிறகு இஸ்ரேலுக்கு ஆனந்தம் ஏற்பட்டிருக்கலாம். ஆனால், இரத்த சாட்சியாகி ஏழு வருடங்கள் கழிந்தபிறகு ஃபலஸ்தீன் மக்களுக்கு ஷேக் யாஸீன் மீதான் அன்பு கூடியுள்ளது.

காஸ்ஸா நகரத்திற்கு அருகில் உள்ள ஸப்ராவில் ஷேக் யாஸீனுடைய வீட்டில்
அவர் பயன்படுத்திய பொருட்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளன.அருங்காட்சியமாக மாறிய அவருடைய வீட்டிற்கு பார்வையாளர்கள் திரளாக வந்து செல்கின்றனர். இந்த வீடு நாட்டின் இல்லமாக மாறிவிட்டது என அவருடைய மகன் அப்துல் ஹமீஸ் யாஸீன் கூறுகிறார்.

கூட்டங்கள் நடத்த தனது தந்தை உபயோகித்த அறையை பார்வையாளர்கள் செல்லும் வகையில் தயார்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்தார். ஐந்து அறைகளை கொண்ட இந்த வீட்டில்தான் ஷேக் யாஸீன் அவர்களின் மனைவியும், இரண்டு புதல்வர்களும் பல உறவினர்களும் தற்போது வசித்துவருகின்றனர்.

இஸ்ரேலின் கொடூர ராக்கெட் தாக்குதலில் ஷேக் யாஸீன்  கொல்லப்படும்போது உபயோகித்த சக்கர நாற்காலியின் சிதிலங்கள், அவர் உபயோகித்த திருக்குர்ஆன், நூல்கள், புத்தக சேகரங்கள், கம்ப்யூட்டர் ஆகியனவும், மரணித்த ஜோர்டான் மன்னர் ஹுஸைன், ஃபலஸ்தீன் தலைவர் யாஸிர் அரஃபாத், ஹமாஸ் தலைவர்கள் ஆகியோரின் படங்களும் அறையில் வைக்கப்பட்டுள்ளன.

மார்க்க அறிஞரும்,இரத்த சாட்சியுமான யாஸீனின் நினைவுகளை புதுப்பிக்க இந்த அருங்காட்சியகம் உதவிகரமாக இருக்கும் என பார்வையாளர் புத்தகத்தில் எழுதியுள்ளார் காஸ்ஸாவின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா. 1980 ஆம் ஆண்டு ஹமாஸின் உருவாக்கம் உள்பட பல்வேறு வரலாற்று சிறப்பு மிக்க சம்பவங்களுக்கு சாட்சி வகித்த வீடுதான் ஷேக் யாஸீனின் இல்லம். துவக்க காலங்களில் ஹமாஸின் கூட்டம் இங்கேதான் நடைபெற்றது.

கடந்த 2004-ஆம் ஆண்டு மார்ச் 22-ஆம் தேதி ஃபஜ்ர்(அதிகாலை தொழுகை) தொழுகையை நிறைவேற்றிவிட்டு மஸ்ஜிதில் இருந்து வெளியே வரும்போது இஸ்ரேலின் கொடூரமான ராக்கெட் தாக்குதலில் இரத்த சாட்சியானார் ஷேக் யாஸீன்.

சிறுவயதிலேயே விபத்தில் சிக்கி உடல் தளர்ந்த ஷேக் அஹ்மத் யாஸீன் சக்கர நாற்காலியில் பயணித்து தனது வாழ்நாளை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பிற்கும் அட்டூழியங்களுக்கும் எதிரான போராட்டத்தில் செலவழித்த மாபெரும் வீரர் ஆவார்.அவருடைய நினைவுகளை ஃபலஸ்தீன் முஸ்லிம்கள் மட்டுமல்ல உலக முஸ்லிம்களும் என்றும் மறக்கமாட்டார்கள்.

No comments:

Post a Comment