Sunday, 5 June 2011

ரஃபா எல்லைக்கடவை மீண்டும் மூடப்பட்ட மர்மம் என்ன?

ரஃபா எல்லைக் கடவை இன்று எகிப்திய அதிகாரத் தரப்பினால் திடீரென மூடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் இதுவரை கூறப்படவில்லை என ரஃபா எல்லைக் கடவைக்கான காவற்படைப் பணிப்பாளர் ஐயூப் அபூ ஷார் தெரிவித்துள்ளார்.


உள்ளகத்துறை அமைச்சகத்தின் உத்தியோகபூர்வ இணையதளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், பலஸ்தீனில் இருந்து எகிப்து நோக்கிப் பயணிகளை ஏற்றிச் சென்ற பஸ்களுக்கு ரஃபா எல்லைக் கடவையைத் தாண்டிச் செல்ல எகிப்திய அதிகாரத் தரப்பினரால் அனுமதி மறுக்கப்பட்டதாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.


எகிப்திய தரப்பின் இந்தத் திடீர் மாற்றத்தினால் பெரும் ஆச்சரியத்துக்குள்ளான பலஸ்தீன் உள்ளகத்துறை அமைச்சகம், இந்த அனுமதி மறுப்புக்கான காரணத்தை வினவியபோதும், இதுவரை அதற்குரிய சரியான பதிலளிக்கப்படவில்லை என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ரஃபா எல்லைக் கடவைக்கு முன்னால் குழுமியிருந்த நூற்றுக்கணக்கான பலஸ்தீன் பொதுமக்கள், நுழைவு அனுமதிக்காக பல மணிநேரமாகக் காத்திருந்து ஏமாற்றமடைந்தனர். 'ரஃபா கடவை இனி நிரந்தரமாகத் திறந்து வைக்கப்படும்' எனப் பிரகடனப்படுத்தியிருந்த எகிப்திய அதிகாரத் தரப்பு மேற்கொண்ட இந்தத் திடீர் செயற்பாட்டினால் அனேகமான பலஸ்தீனர்கள் பெரும் விரக்தியடைந்துள்ளனர்.

அபூ ஷார் குறிப்பிடுகையில், ரஃபா கடவை திறந்து வைக்கப்பட்ட முதல் மூன்று நாட்களும் மிகச் சிறப்பாக இயங்கியதாகவும், அடுத்த மூன்று தினங்கள் அதன் செயற்பாடுகள் படிப்படியாக மந்த நிலையடைந்து இன்று எத்தகைய முன்னறிவித்தலும் இன்றி முற்றாக மூடப்பட்டு விட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

(குறிப்பு: ரஃபா எல்லைக் கடவையை நிரந்தரமாகத் திறக்கும் எகிப்தின் தீர்மானம் பற்றிய செய்தியை வெளியிட்ட முத்துப்பேட்டை பாப்புலர் ஃப்ரண்ட்   தளம், தனது நீண்ட கால நண்பனான இஸ்ரேலுடையதும், அதன் நிரந்தரப் பாதுகாவலனான அமெரிக்காவினதும் 'அதிருப்தியைச் சம்பாதித்துக் கொள்ளும் வகையில், இஸ்ரேல் ஐந்து வருடங்களுக்கும் மேலாக அமுல்நடத்திவரும் காஸா முற்றுகையை நீக்கி, பலஸ்தீனரின் துயர்துடைக்கும் நடவடிக்கைகளில் எகிப்து தொடர்ந்தும் துணிந்து நிற்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்' என்று குறிப்பிட்டிருந்தமை வாசகர்களுக்கு நினைவிருக்கலாம்.)

No comments:

Post a Comment