எதிர்வரும் ஜூன் 20 ஆம் திகதி ஐரோப்பாவில் இருந்து காஸாவை நோக்கிப் பயணப்பட இருக்கும் ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 கப்பல்களை இடைநிறுத்துவதற்கு ராஜதந்திர நடவடிக்கைகளைக் கைக்கொள்ளும் முயற்சிகளில் இஸ்ரேல் ஈடுபடப் போவதில்லை. மாறாக, இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் கட்டளைகளுக்குக் கீழ்படிய மறுக்கும் யார் மீதும் பலப்பிரயோகம் செய்ய அது தயங்காது என இஸ்ரேலிய செய்தி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இஸ்ரேலிய ஹாரெட்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியில், ஃப்ரீடம் ஃபுளோடில்லா – 2 கப்பல்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் கடற்படையின் உத்தரவுகளை ஏற்க மறுத்து காஸா கடற்கரையை அண்மிக்குமாக இருந்தால், அவற்றின்மீது தாக்குதல் நடாத்துவதை இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ தடுக்கப் போவதில்லை எனத் தெரிவித்துள்ளது.
தற்போது இஸ்ரேலில், இஸ்ரேலியப் புலனாய்வுத்துறை ஒன்றுகூடல் நடவடிக்கைகள் உள்ளிட்ட இராணுவ முன்னாயத்தங்கள் தொடர்பான பரவலான கலந்துரையாடல்கள் மும்முரமாக இடம்பெற்று வருகின்றன.
கடந்த வருடம் மே 31 ஆம் திகதி ஃபுளோடில்லா- 1 மீது 'தவறுதலாக' இடம்பெற்ற தாக்குதலைப் பொறுத்தவரையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புப் படைக்கு அக்கப்பல்களைத் தடுத்து நிறுத்துவதற்கு, அவற்றின் மீது தாக்குதல் மேற்கொள்வதைத் தவிர வேறு வழியிருக்கவில்லை என்றும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.
தங்கள் சிப்பாய்களின் உயிருக்கு அச்சுறுத்தலான நிலை ஏற்பட்டமையினாலேயே துருக்கிய மனிதாபிமானச் செயற்பாட்டாளர்களைப் படுகொலை செய்ய நேர்ந்தது என இஸ்ரேலின் முன்னாள் சிரேஷ்ட இராணுவ அதிகாரி கெபி அஷ்கனாஸி, துருக்கியச் செயற்பாட்டாளர்கள் மீதான படுகொலைகளை நியாயப்படுத்தியுள்ளார்.
No comments:
Post a Comment