Saturday 28 May 2011

தொடரும் பாசிச சேவை:பாண்டே கடமை தவறவில்லை-எஸ்.ஐ.டியின் நற்சான்றிதழ்


அஹ்மதாபாத்:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையை குறித்து விசாரணையை நடத்த உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) முன்னாள் குஜராத் மாநில டி.ஜி.பி பி.சி.பாண்டேவுக்கு நற்சான்றிதழ்(clean chit) வழங்கியுள்ளது.

மோடியின் கும்பலுக்கு எஸ்.ஐ.டியின் சேவை தொடர்வதையே இச்சம்பவம் உணர்த்துகிறது. 2002-ஆம் முஸ்லிம் இனப்படுகொலையில் பாண்டே தனது கடமையை தவறவில்லை (dereliction) என ஆண்டு குல்பர்க் சொசைட்டி கூட்டுக்கொலை வழக்கு விசாரணை நடந்துவரும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.ஜே.தந்தாவிடம் எஸ்.ஐ.டி தெரிவித்துள்ளது.



2002 பெப்ருவரி 28-ஆம் தேதி காங்கிரஸ் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரி உள்ளிட்ட 69 பேர் ஹிந்துத்துவா தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டனர். கொல்லப்பட்டவர்களில் சிலரின் உறவினர்கள் இம்மாத துவக்கத்தில் பாண்டே உள்பட நான்கு போலீஸ் அதிகாரிகள் கடமையாற்ற தவறினர் என குற்றம் சாட்டி நீதிமன்றத்தில் புகார் அளித்தனர்.

ஆனால், சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞர் ஆர்.ஸி.கோடேக்கர் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்களுடைய வாதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். பாண்டேவும், அவருடைய சக அதிகாரிகளும் கடமையை தவறினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை என கோடேக்கர் நீதிமன்றத்தில் தெரிவித்தார். பாண்டே உள்பட நான்கு மண்டல டி.சி.பிக்கள் பி.பி.கோண்டியா, க்ரைம் ப்ராஞ்ச் ஏ.சி.பி எஸ்.எஸ்.சுதஸாமா, இணை போலீஸ் கமிஷனர் எம்.கே.டண்டன் ஆகியோருக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.

எம்.கே.டண்டனை குற்றவாளியாக சேர்க்க வேண்டும் என பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சமர்ப்பித்த புகாரை சிறப்பு நீதிமன்றம் இவ்வருட துவக்கத்தில் தள்ளுபடி செய்ததாக கோடேக்கர் கூறினார். இம்மனு மீதான தீர்ப்பு இம்மாதம் 31-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஹிந்துத்துவ பயங்கரவாதிகளிடமிருந்து உயிரை பாதுகாத்துக்கொள்ள இஹ்ஸான் ஜாப்ரி முதல்வர் நரேந்திரமோடி மற்றும் ஏராளமான போலீஸ் அதிகாரிகளை தொலை பேசியில் அழைத்து உதவி தேடிய போதும் எவரும் உதவ முன்வரவில்லை என ஜாப்ரியின் மனைவி ஸாக்கியா உச்ச நீதிமன்றத்தில் அளித்த புகாரில் தெரிவித்திருந்தார்.

இப்புகாருக்கு ஆதரவாக சமீபத்தில் குஜராத் மாநில மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்திருந்தார். முஸ்லிம்களுக்கு பாடம் கற்பிக்கவும், ஹிந்துக்கள் தங்களது கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்பு அளிக்கவும் நரேந்திர மோடி கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் நடந்த பிறகு அழைத்த உயர் அதிகாரிகளின் கூட்டத்தில் உத்தரவிட்டதாக பட் தனது பிரமாணப்பத்திரத்தில் தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே 2006-ஆம் ஆண்டு பந்தவாடா வழக்கில் தனக்கு எதிரான ஆரம்ப விசாரணை அறிக்கையை ரத்து செய்ய கோரி சமூக ஆர்வலர் டீஸ்டா செடல்வாட் சமர்பித்த மனுவை குஜராத் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. குஜராத் இனப்படுகொலையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு நான்கு வருடங்கள் கழிந்த பிறகு வெளியே எடுத்த வழக்கில் டீஸ்டா குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். விசாரணைக்கு வருகிற மே மாதம் 31-ஆம் தேதி விசாரணை அதிகாரி முன்பு ஆஜராக டீஸ்டாவுக்கு சம்மன் அனுப்பப்படு இருந்தது.

விசாரணை அதிகாரிகளுடன் நிரந்தர தொடர்பில் இருப்பதாகவும், தப்பி ஓடிவிட்டார் என சம்மனில் கூறுவது தவறு எனவும் டீஸ்டா நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நீதிபதி ஷா சம்மனை ரத்து செய்தார்.

No comments:

Post a Comment