சென்னை:உள்ளாட்சி
தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று மாலை வெளியிடப்படுகிறது.
வாபஸ் பெறப்பட்ட மற்றும் தள்ளுபடியான வேட்புமனுக்கள் பற்றி தகவல்களுடன்,
போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி இடங்கள் பற்றிய விவரத்தையும்
மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடுகிறது.
தமிழகத்தில் 10 மாநகராட்சிகள், 125
நகராட்சிகள் உள்ளிட்ட 1 லட்சத்து 32,401 உள்ளாட்சி பதவியிடங்களுக்கு 17, 19
ஆகிய தேதிகளில் 2 கட்டமாக வாக்குப் பதிவு நடக்கிறது. வேட்புமனு தாக்கல்
கடந்த 22ம் தேதி தொடங்கி, 29ம் தேதி முடிந்தது. மொத்தம் 5 லட்சத்து 27014
பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் மீதான பரிசீலனை 3 நாட்கள்
நடந்தது. தேர்தல் அறிவிப்பு வெளியான மறுநாளே வேட்புமனு தாக்கல் தொடங்கி
விட்டதால், போதிய அவகாசம் இல்லாமல் பலர் அவசரமாக மனு தாக்கல் செய்தனர்.
படிவத்தை சரியாக பூர்த்தி செய்யாமலும், தேவையான ஆவணங்களை வைக்காமலும் பல
மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இதையடுத்து, சிறிய தவறுகளுக்காக மனுக்களை
தள்ளுபடி செய்யக் கூடாது என்று மாநில தேர்தல் ஆணையர் சோ.அய்யர்
அறிவித்தார். அதனால், மனுவில் உள்ள குறைபாடுகளை நீக்க வேட்பாளர்களுக்கு
வாய்ப்பு அளிக்கப்பட்டது. வழக்கமாக பரிசீலனையின்போதே, எவ்வளவு மனுக்கள்
தள்ளுபடி செய்யப்பட்டன என்ற விவரம் தெரிந்துவிடும். ஆனால், இந்த உள்ளாட்சி
தேர்தலில் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதால் பரிசீலனை நேற்று வரை
நீடித்தது.
இந்நிலையில் இன்று மனுக்களை வாபஸ் பெற கடைசி
நாள். எனவே எவ்வளவு பேர் வாபஸ் பெற்றனர்? எத்தனை மனுக்கள்
நிராகரிக்கப்பட்டன? போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்கள் எத்தனை என்ற
விவரங்களுடன், இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று மாநில
தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதன்பின்னர், சுயேச்சைகள் மற்றும்
அங்கீகரிக்கப்படாத கட்சி வேட்பாளர்களுக்கு சின்னங்கள் ஒதுக்கீடு
செய்யப்படும் என்றும் ஆணையம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment