Monday 3 October 2011

ஜம்மு-காஷ்மீர் சட்டப் பேரவையில் அமளி: பேரவைத் தலைவரை நோக்கி மின்விசிறி வீச்சு


தேசிய மாநாட்டுக் கட்சி தொண்டர் சயீத் யூசுப் மரணம் தொடர்பாக ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையில் இன்று அமளி ஏற்பட்டது.
சட்டப்பேரவைத் தலைவர் முகமது அக்பர் லோனேவுக்கும் எதிர்க்கட்சியான பி.டி.பி உறுப்பினர்களுக்கும் இடையே இன்று அவை தொடங்கியதும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.

எதிர்க்கட்சி உறுப்பினர்களை நோக்கி சட்டப்பேரவைத் தலைவர் கடுமையான வார்த்தைகளைக் கூறிய போது, அவரை நோக்கி உறுப்பினர் ஒருவர் மின்விசிறி ஒன்றை வீசினார். இதனால் அவையில் பயங்கர அமளி ஏற்பட்டது.



முன்னதாக கேள்வி நேரத்தை ரத்து செய்துவிட்டு சயீத் யூசுப் மரணம் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என்று பி.டி.பி உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதற்கு ஆளும் கட்சி உறுப்பினர்கள் பலத்த எதிர்ப்பு தெரிவித்ததால் பேரவைத் தலைவருக்கும், பி.டி.பி எம்.எல்.ஏ இப்திகார் ஹூசைனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியினால் பேரவையை அரை மணிநேரம் ஒத்திவைப்பதாக பேரவைத் தலைவர் அறிவித்தார்.

போலிஸ் காவலில் சயீத் யூசுப் இறந்தது தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியான பி.டி.பி ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டுவர முடிவுசெய்துள்ளது. இதனிடையே இந்த விவகாரத்தில் முதல்வர் ஓமர் அப்துல்லா மீது எந்தத் தவறும் இல்லை என்று காஷ்மீர் அரசு தெரிவித்துள்ளது.

முதல்வரின் இல்லத்தில் இருந்து யூசுப் புறப்பட்டுச் சென்றுள்ளதை சிசிடிவி கேமரா காட்சிகள் குறிப்பிடுகின்றன. எனவே அவர் முதல்வரின் இல்லத்தில் இறக்கவில்லை என்பது தெரிகிறது என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

முன்னதாக ஒருவருக்கு அமைச்சர் பதவியும், மற்றொருவருக்கு சட்டமேலவையில் இடமும் வாங்கிக் தருவதாகக் கூறி 2 பேரிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் வரை யூசுப் பெற்றதாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அவரை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் முதல்வர் பிடித்துக் கொடுத்தார். அதன் பின்பு போலிஸ் காவலில் யூசுப் இறந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment