Monday 3 October 2011

சிரியாவில் எதிர்க்கட்சிகளின் தேசிய கவுன்சில் உருவாக்கம்

வெளிநாடுகளில் இயங்கும் சிரியா எதிர்க் கட்சிகள் அனைத்தும் “தேசிய ஐக்கிய கவுன்சில்” என்ற பெயரில் ஒருங்கிணைந்துள்ளன.

இதன் மூலம் அந்நாட்டின் எதிர்க் கட்சிகள் அதிபர் பஷர் அல் அசாத்துக்கு எதிரான போராட்டங்களை இன்னும் வலுவாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.


சிரியாவில் அதிபர் அசாத்துக்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரம் அடையாததற்கு அங்குள்ள எதிர்க் கட்சிகள் ஓரணியாகத் திரளாததே காரணம் என அரசியல் நிபுணர்கள் கூறி வந்தனர். இந்நிலையில் துருக்கியின் இஸ்தான்புல் நகரில் கூடிய சிரியா எதிர்க் கட்சிகள் மாநாட்டில் தேசிய ஐக்கிய கவுன்சில் உருவாக்கப்பட்டுள்ளது.

பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள சோர்போர்ன் பல்கலைகழகத்தில் சமூகவியல் பேராசிரியராக பணியாற்றி வரும் புர்ஹான் கில்யோன் கவுன்சிலின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில்,“இக்கவுன்சிலில் அனைத்து சிரியா மக்களும் சேரலாம். சிரியா மக்களின் விடுதலைக்கான போராட்டத்தில் அவர்களின் இறையாண்மையைக் காக்கும் சுயேச்சையான அமைப்பாக இது செயல்படும்” என்றார்.

சிரிய விவகாரத்தில் வெளிநாடுகளின் தலையீட்டை நிராகரித்துள்ள கவுன்சில் சிரியா மக்களைப் பாதுகாக்க ஐ.நா சிரியா அரசைக் கட்டுப்படுத்த வேண்டும் எனக் கோரியுள்ளது.

சிரியா போராட்டத்தில் கவுன்சிலின் உருவாக்கம் ஒரு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த செயலாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில் தலைநகர் டமாஸ்கசில் இருந்து 180 கி.மீ தொலைவில் உள்ள ரஸ்தான் நகரின் பெரும்பகுதியை எதிர்ப்பாளர்களிடம் இருந்து சிரியா ராணுவம் கைப்பற்றியுள்ளது.

No comments:

Post a Comment