Monday 3 October 2011

மணிப்பூரில் போராட்டம்: அன்றாட வாழ்க்கை பாதிப்பு

Security personnel and forensic experts inspect the site after a bomb exploded at a busy market in Imphal on Monday. மணிப்பூரில் நடக்கும் போராட்டம் காரணமாக அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு விலைவாசி உயர்வும் ஏற்பட்டுள்ளதால் மக்கள் கவலை அடைந்துள்ளனர்.

மணிப்பூரில் கடந்த 2 மாதங்களாக நடக்கும் சாலை மறியல் போராட்டங்களால் நாட்டின் பிற பகுதியில் இருந்து மணிப்பூர் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசியப் பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. நிலைமையை சமாளிக்க முடியாமல் மணிப்பூர் அரசு தவித்து வருகிறது.



நாட்டின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள பசுமையான மலைகள் சூழ்ந்த மணிப்பூர் மாநிலத்தில் கடந்த 1982ம் ஆண்டு முதல் சாதர் மலைப் பகுதி பிரச்சனை, தீர்க்கப் படாத பிரச்னையாக உள்ளது.

மணிப்பூர் மாநிலத்தின் வடக்கு பகுதியில் சேனாபதி மாவட்டம் உள்ளது. இதில் நாகா பழங்குடியினர் அதிகம் வசிக்கின்றனர். இந்த மாவட்டத்தில் சாதர் மலைப் பகுதியை பிரித்து தனி மாவட்டமாக அமைக்க வேண்டும் என்று சாதர் மக்கள், மாவட்ட கோரிக்கை கமிட்டி(எஸ்.எச்.டி.டி.சி) என்ற அமைப்பு போராடி வருகிறது.

குகி பழங்குடியினர் இந்த அமைப்பில் அதிகம் உள்ளனர். தனி மாவட்ட கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஆகஸ்ட் 1ம்  திகதி முதல் குகி பழங்குடியினர் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதே நேரத்தில் மணிப்பூரில் வசிக்கும் நாகா இன மக்களின் தலைமை

அமைப்பான ஐக்கிய நாகா கவுன்சில்(யு.என்.சி) மணிப்பூரின் வடக்கு பகுதியில் நாகர்கள் அதிகம் வசிப்பதால் தங்களது ஒப்புதல் இல்லாமல் எந்த ஒரு பகுதியையும் பிரித்து தனி மாவட்டம் அமைக்கக் கூடாது என்று போராடி வருகிறது.

இந்த இரண்டு பழங்குடியினர் அமைப்புகளின் போராட்டத்தால் மணிப்பூரில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு மாதங்களாக சேனாபதி மாவட்டத்தில் உள்ள என்.எச். 53, என்.எச்.39 ஆகிய இரண்டு தேசிய நெடுஞ்சாலைகளிலும் மறியல் நடப்பதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.
மறியலை மீறி வாகனங்கள் சென்றால் அவற்றுக்கு தீ வைக்கப்படுகின்றன. இதுவரையில் 18க்கும் மேற்பட்ட வாகனங்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டு உள்ளன. ஏராளமான வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு உள்ளன.

இந்த சாலைகளின் வழியாகத்தான் நாகாலாந்து, அசாம் ஆகிய மாநிலங்களுக்கு லொரிகள் மற்றும் பிற வாகனங்கள் அத்தியாவசியப் பொருட்களை எடுத்துச் செல்ல வேண்டும். மேலும் மணிப்பூரும் அத்தியாவசியப் பொருட்களுக்கு வெளி மாநிலங்களிலிருந்து வரும் லொரிகள் மற்றும் பிற சரக்கு வாகனங்களை நம்பித்தான் இருக்க வேண்டும்.

சாலை மறியல் மற்றும் போராட்டத்தால் மணிப்பூரில் சமையல் கியாஸ், பெட்ரோல், டீசல் மற்றும் அத்தியாவசியப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கள்ளச் சந்தையில் சமையல் காஸ் சிலிண்டர் ரூ.1,700க்கும் பெட்ரோல் ரூ100க்கும் விற்கப்படுகிறது. அத்தியாவசியப் பொருட்களின் விலை இரண்டு முதல் மூன்று மடங்கு அதிமாக விற்கப்படுகின்றன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

பெட்ரோல், டீசல் வாங்குவதற்காக பெட்ரோல் விற்பனை நிலையங்களில் பல மணி நேரம் முதல் ஒரு நாள் வரை நீண்ட வரிசைகள் மக்கள் காத்திருக்கும் நிலை நிலவுகிறது.

இந்த பிரச்சனையை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பது குறித்து விவாதிக்க டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை மணிப்பூர் மாநில முதல்வர் ஓக்ராம் இபோபி சிங் அண்மையில் சந்தித்து பேசினார். கடந்த ஒன்றரை மாதங்களில் மாநில அமைச்சரவையும் 5 முறை கூடி இந்த பிரச்சனை குறித்து விவாதித்தது.

ஆனால் பிரச்சனைக்கு சுமூக தீர்வு காண்பதில் ஏற்பட்டுள்ள முட்டுக்கட்டையால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment