Thursday 29 September 2011

உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்றுடன் முடிவடைகிறது

சென்னை: தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று மாலையுடன் முடிவடைகிறது. வாக்குப் பதிவு இரண்டு கட்டங்களாக அக்டோபர் 17 மற்றும் 19 ஆகிய தேதிகளில் நடைபெறும்.

மொத்தம் உள்ள 1,32,401 உள்ளாட்சிப் பதவியிடங்களுக்கு மிகப் பெரிய போட்டி நிலவுகிறது. நேற்று மாலை வரை 2,62,634 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். இன்று மாலையுடன் வேட்பு மனுத் தாக்கல் முடிவடைகிறது.

தமிழ்நாட்டில் 10 மாநகராட்சிகளும், 125 நகராட்சிகளும், 529 பேரூராட்சிகளும், 31 மாவட்ட ஊராட்சிகளும், 385 ஊராட்சி ஒன்றியங்களும், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகளும் உள்ளன. இதில் திருச்சி மாநகராட்சி நீங்கலாக மற்ற மாநகராட்சிகளுக்கும், பிற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது.

22ம் தேதி தொடங்கிய வேட்பு மனு தாக்கல் ஆரம்பத்தில் மிகவும் மந்தமாக இருந்தது. ஆனால் போகப் போக விறுவிறுப்படைந்தது. இந்த முறை மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் ஆகிய பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடைபெறுவதால்மக்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி மேயர் பதவிக்கு மா.சுப்ரமணியன், சைதை துரைசாமி உள்பட 25 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர். 200 வார்டுகளுக்கு 1019 பேர் மனுத் தாக்கல் செய்துள்ளனர்.

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை 30ம் தேதியான நாளை நடைபெறும். மனுக்களை வாபஸ் பெற விரும்புவோர் அக்டோபர் 3ம் தேதிக்குள் அதைச் செய்ய வேண்டும். அன்று மாலை வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியிடப்படும். சின்னங்களும் ஒதுக்கப்படும்.

வரலாறு காணாத தனித்துப் போட்டி

வழக்கமாக சட்டசபை, லோக்சபா தேர்தல்களின்போது கூட்டணி சேர கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவும். ஆனால் இந்த உள்ளாட்சித் தேர்தலிலோ தனித்துப் போட்டியிட முண்டியடித்துக் கொண்டிருக்கின்றனர். இது மக்களிடையே வியப்பை ஏற்படுத்தியுள்ளது. கூட்டணிக் கட்சிகளுக்குக் கூட சொல்லாமல் கொள்ளாமல், அதிமுக, திமுக ஆகியவை தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்து வேட்பாளர்களையும் அறிவித்து முடித்து விட்டன. இதனால் அதிருப்தி அடைந்த கூட்டணிக் கட்சிகள் அவையும் தனியாக போட்டியிடுவதாக அறிவித்துள்ளன.

தற்போதைய நிலையில் திமுக, அதிமுக தனித் தனியாக போட்டியிடுகின்றன. பாஜகவும், கொமுகவும் ஒரு கூ்டணியாக போட்டியிடுகின்றன. விடுதலைச் சிறுத்தைகள் இஸ்லாமிய அமைப்புகளை இணைத்து ஒரு புதுக் கூட்டணி கண்டுள்ளது. தேமுதிக தலைமையில் சிபிஎம், சிபிஐ ஆகியவை இணைந்துள்ளன. புதிய தமிழகம் தனித்துப் போட்டியிடுகிறது. மனித நேய மக்கள் கட்சி தனித்துப் போட்டியிடுகிறது. இப்படி கிட்டத்தட்ட அத்தனை பேரும் தனித்துப் போட்டியிடுவதால், யாருக்கு உண்மையான பலம் உள்ளது என்பதை ஓரளவுக்கு மக்கள் புரிந்து கொள்ள வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

தலைவர்கள் பிரசாரம் சூடு பிடிக்கிறது

அடுத்துத் தலைவர்களின் தேர்தல் பிரசாரம் சூடு பிடிக்கும். ஏற்கனவே விஜயகாந்த் பிரசாரத்தை ஆரம்பித்து விட்டார். மற்ற தலைவர்களும் விரைவில் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளனர்.

முதல்வர் ஜெயலலிதா 9 மாநகராட்சிகளிலும் அக்டோபர் 2வது வாரத்தில் பிரசாரத்தைத் தொடங்கவுள்ளார். சூறாவளி சுற்றுப்பயணம் செய்து வாக்கு சேகரிக்கவுள்ளார்.

அதேபோல திமுக சார்பில் கருணாநிதியும் பிரசாரம் செய்வார். இருப்பினும் அவர் குறிப்பிட்ட சில ஊர்களில் மட்டும் பிரசாரம் செய்வார் எனத் தெரிகிறது. மு..க.ஸ்டாலினே திமுக சார்பில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்வார். பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உள்ளிட்டோரும் பிரசாரத்தில் குதித்துள்ளனர்.

தேமுதிக சார்பில் விஜயகாந்த் தவிர அவரது மனைவி பிரேமலதா விஜயகாந்த்,மச்சான் சுதீஷ் ஆகியோரும் பிரசாரம் செய்வார்கள். மதிமுக சார்பில் வைகோவின் பிரசாரம் சூடு பிடிக்கும். நாம் தமிழர் இயக்கத் தலைவர் சீமான் யாருக்கு ஆதரவாக பிரசாரம் செய்யவுள்ளார் என்பது தெளிவாகத் தெரியவில்லை.

No comments:

Post a Comment