Monday 5 September 2011

ஜனார்த்தன ரெட்டி கைது : சி.பி.ஐ அதிரடி

கர்நாடகாவின் முன்னாள் சுற்றூலாத்துறை அமைச்சர் ஜனார்த்தன ரெட்டி இன்று (திங்கட்கிழமை)
காலை சி.பி.ஐயினரால் திடீர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுரங்க ஊழல் மோசடி தொடர்பில், முதலமைச்சர் எடியூரப்பா மீது, லோக் ஆயுக்தா குற்றம் சாட்டியதை தொடர்ந்து அவர் பதவி விலகினார். இந்நிலையில் ஒபலாபுரத்தில் முறைகேடாக சுரங்கம் நடத்தி வருவதாக ரெட்டி சகோதரர்கள் மீதும், லோக் ஆயுக்தா குற்றம் சுமத்தியது.

இதையடுத்து ரெட்டி சகோதரர்களுக்கும் புதிய அமைச்சரவையிலும் வாய்ப்பு கிடைக்காது போனது.

இந்நிலையில் ஜனார்த்தன ரெட்டியின் பெல்லாரி வீடு, பெங்களூரு அலுவலகம் இரண்டிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஒரே நேரத்தில் திடீர் தேடுதல் மேற்கொண்ட சி.பி.ஐ அதிகாரிகள், முறைகேடு நடந்திருப்பதற்குரிய பல முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி இருப்பதாகவும்,
இதை தொடர்ந்து ஜனார்த்தன ரெட்டி, அவரது உறவினரும் ஒபுலாபுரம் சுரங்க நிறுவனத்தின் இயக்குனருமான சீனிவாச ரெட்டி ஆகியோரை கைது செய்ததாகவும் அறிவித்துள்ளது.

தற்சமயம் இருவரும் ஹைதராபாத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், அங்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றில் விரைவில் ஆஜர்படுத்தப்பட்டு விசாரணை தொடரவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

கிரிமினல் சதி மற்றும் மோசடி, ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் இவர்களுடைய கைது இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment