Monday, 5 September 2011

ஊருக்கெல்லாம் ஒரு நீதி தனக்கு ஒரு நீதியா: அவசரத்திலும் அவசரம்!

கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி சௌமித்ர சென் மீதான கண்டனத் தீர்மானம் அடுத்த வாரம் மக்களவையில் எடுத்துக்கொள்ளப்படவுள்ள நிலையில், அவர் தனது பதவி விலகல் கடிதத்தைக் குடியரசுத் தலைவரிடம் அளித்திருக்கிறார்.

தான் நிரபராதி என்றும், வழக்குரைஞர் தொழில் மூலம் மிக அதிகமான வருமானம் ஈட்டிக்கொண்டிருந்த தனக்கு இத்தகைய முறைகேட்டில் ஈடுபட வேண்டிய அவசியம் இல்லை என்றும், தவறுதல் மனிதனுக்கு சகஜம்தான் என்றும், அரசு நிர்வாகத்தின் ஊழல் மீது நடவடிக்கை எடுத்திருக்கிறோம் என்று உலகுக்குக் காட்டிக் கொள்வதற்காக என்னை பலிகடா ஆக்குகிறார்கள் என்றும் தனது பதவி விலகல் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இப்படியான அப்பாவியின் வாதங்களை மாநிலங்களவை ஏற்கவில்லை என்பதையும், ஏற்கெனவே தலைமை நீதிபதி நியமித்த குழு இவர் மீதான குற்றங்கள் உண்மை என்று உறுதிப்படுத்தியதையும் நீதிபதி சௌமித்ர சென் ரொம்ப செüகரியமாக மறந்துவிடுகிறார் என்பதைவிட மறைக்க முயல்கிறார் என்பதுதான் உண்மை.

தவறுகள் மனித வாழ்க்கையில் சகஜம்தான். அதை நீதிமன்றம் எடுத்துக் கூறிய பிறகும் சரிசெய்ய முன்வராமல் காலம்தாழ்த்தியதால்தான் அவருக்கு இத்தகைய அவமானம் தரும் சூழ்நிலை உருவானது.

இந்தியத் தேனிரும்பு ஆணையம் (செயில்), இந்திய கப்பல் கழகம் ஆகிய நிறுவனங்களுக்கு இடையே ஏற்பட்ட நீதிமன்ற வழக்கில், சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருந்த செüமித்ர சென் வசம் ரூ.33,22,800-ஐ மறுஉத்தரவு வரும் வரை கொடுத்து வைத்திருக்கும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்தப் பணத்தை 1997-ம் ஆண்டு தன் பெயரில் ஒரு தனியார் நிதிநிறுவனத்தில் போட்டு வைத்திருந்தார். 2006-ம் ஆண்டு, செயில் தனது பணத்தைத் திரும்பத் தரும்படி கேட்டபோது, அசலை மட்டும் திருப்பிக் கொடுத்தார். அதற்கான வட்டியைத் தரவில்லை. அன்றைய தேதி வரை அவர் வட்டியும் முதலுமாக அளிக்க வேண்டிய தொகை ரூ.57,46,454. ஏறக்குறைய ரூ.24 லட்சம் குறைவாகக் கொடுத்திருந்தார். இதைத்தான் அவர், மனிதர்கள் செய்யக்கூடிய சாதாரணத் தவறு என்று நியாயப்படுத்துகிறார்.

அவரது பதவி விலகல் நீதித்துறைக்கு பெரும் நிம்மதியை அளித்துள்ளது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் கண்டனத் தீர்மானம் கொண்டுவரப்பட்டு தண்டிக்கப்பட்ட முதல் நீதிபதி என்கிற அவப்பெயரை உருவாக்காமல், அவராகவே பதவி விலகியது நல்லதுதான் என்கிறார்கள். ஆனால் இது நியாயமானதுதானா?

ஒரு கிரிமினல் வழக்கில், குற்றம் சாட்டியவரும் சாட்டப்பட்டவரும் நீதிமன்றத்துக்கு வெளியே சமரசமாகி, வழக்கைத் திரும்பப்பெற முயன்றாலும், கிரிமினல் வழக்கில் செய்த குற்றம் குற்றம்தான்; குற்றத்திலிருந்து தப்பிக்க முடியாது என்கிறது இந்தியக் குற்றவியல் சட்டம். இதுதான் சட்டத்தின் நிலைப்பாடு எனும்போது நீதிமன்றம் எவ்வாறு ஓர் உயர் நீதிமன்ற நீதிபதியை மட்டும், தண்டனைக்கு உட்படுத்தாமல் வெகு எளிதாகப் பதவி விலகிச் செல்ல அனுமதிக்கிறது? அதை நாடாளுமன்றம் அங்கீகரித்து வாளாவிருக்கிறது. 

இதேபோன்று, பல முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கு ஆளான நீதிபதி தினகரன், சிக்கிம் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி பதவியிலிருந்து விலகிக்கொண்டார். அவர் விலகிக்கொண்டதும் அவர் குற்றமற்றவராகிவிட்டார்! முன்பு பஞ்சாப், ஹரியாணா நீதிமன்ற நீதிபதி ராமசாமிக்கும் இதேபோல குற்றத்திலிருந்து தப்பிச்செல்ல வழிவகுக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் கடந்த இரு ஆண்டுகளில் பல மாஜிஸ்திரேட்டுகள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், அதற்கான காரணங்கள் தெரிவிக்கப்படுதில்லை. எந்த ஊழல் தொடர்பாக அல்லது எத்தகைய முறைகேட்டின் காரணமாக அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார் என்பதை மக்களுக்குத் தெரிவிக்க வேண்டிய கடமை நீதித்துறைக்கு இல்லையா? ஊருக்கெல்லாம் நியாயம் சொல்லும் நீதித்துறை தனக்கு மட்டும் வேறு நியாயத்தைக் கடைப்பிடிப்பது என்ன நியாயம்?

முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி பாலகிருஷ்ணன் தனது மருமகனுக்காக கேரள மாநிலத்தில் நிறைய சொத்துகள் சேர்த்துக் கொடுத்துள்ளார் என்று புகார்கள் எழுந்தபோது, அந்த சொத்துகள் எவ்வாறு வருமானத்துக்கு மீறியவை என்பதை சோதனை நடத்தியிருக்க வேண்டும். ஆனால், சினிமா நடிகர்களின் வீட்டில்தான் சோதனை நடந்தது. தொழில் செய்து சம்பாதித்து வரி செலுத்தாதவர் வீட்டில் சோதனை நடத்துவது நியாயமானதுதான். ஆனால், பதவியை வைத்து ஊழல் செய்து சம்பாதித்தவர் வீட்டிலும் சோதனையிட வேண்டாமா? வருமானத்துக்கு அதிகமான சொத்துகளைப் பறிமுதல் செய்ய வேண்டாமா?

நீதித்துறையை மிகவும் புனிதமானதாகக் கருதித்தான், லோக்பால் மசோதா வரம்புக்குள் அவர்களைக் கொண்டுவரக்கூடாது என்று ஆதரவுக் குரல் எழுகிறது. ஆனால், நீதிபதிகளே குற்றவாளிகளாக இருக்கும்போது, அவர்களுக்கு யார் தண்டனை வழங்குவது?

அமைச்சர்கள் சொத்து விவரங்கள் அளிக்கும்படி பிரதமர் கேட்டு மூன்று மாதங்கள் கடந்தும் இன்னும்கூட அமைச்சர்கள் அந்த விவரங்களைத் தரவில்லை என்று செய்திகள் வெளியாகின்றன. ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பலர் தங்கள் சொத்து விவரங்களை அளிக்கவில்லை. தகவல் அறியும் சட்டத்துக்கு உட்படமாட்டோம், எங்கள் சொத்து விவரங்களை அறிவிக்க மாட்டோம் என்று நீதிபதிகளே சொன்னால், அமைச்சர்களும் ஐஏஎஸ் அதிகாரிகளும் எப்படி சொத்துக் கணக்கை அரசுக்குச் சமர்ப்பிப்பார்கள். நீதி வழங்குபவர்கள் அல்லவா நேர்மைக்கும் நியாயத்துக்கும் வழிகாட்டிகளாக இருக்க வேண்டும்!

சாதாரண குடிமகன் தவறு செய்தால் ஓராண்டு தண்டனை என்றால் நீதிபதி தவறு செய்தால் இரட்டை தண்டனை தரப்படுவதுதானே நியாயம். அப்போதுதான் நீதித்துறையில் தவறுகள் தடுக்கப்படும். அண்ணா ஹசாரே கூறுவதுபோல் அரசு அலுவலர்களின் ஊழல்கள் மட்டுமல்ல, நீதித்துறையில் தவறு நடந்தாலும் ஆயுள் தண்டனை கொடுத்தால்கூடத் தகும்.

உடனடித் தேவை நீதித்துறைச் சீர்திருத்தம். நீதித்துறையில் வெளிப்படைத்தன்மை அதைவிட அவசரம்!

நன்றி : தினமணி 

No comments:

Post a Comment