Monday, 26 September 2011

உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிகவுடன் கூட்டணி-மார்க்சிஸ்ட் கம்யூ. அறிவிப்பு

Vijayakanth and G RamakrishnanVijayakanth and G Ramakrishnanசென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் இன்று மீண்டும் சந்தித்து ஆலோசனை நடத்தியதைத் தொடர்ந்து இரு கட்சிகளும் கூட்டணி வைத்து உள்ளாட்சித் தேர்தலை சந்திக்க முடிவு செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு அதிமுக, திமுக, தேமுதிக, பாமக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள், இடதுசாரிகள், புதிய தமிழகம் என அத்தனை கட்சிகளுமே தனியாக நிற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. பாஜக மட்டும் கொங்கு நாடு முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்துப் போட்டியிடுகிறது.

நேற்று மாலை முதல் பேச்சு

இந்த நிலையில் நேற்று மாலை திடீர் திருப்பம் ஏற்பட்டது. தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான தேமுதிகவுடன் கூட்டணி அமைப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என்று இடதுசாரி தலைவர்கள் திடீரென அறிவித்தனர். இதனால் புதிய அணி உருவாகும் சூழல் பிரகாசமாகியது.

இதுதொடர்பாக தேமுதிக தலைவர் விஜயகாந்த்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் தலைமையிலான குழுவினர் நேரில் சந்தித்து ஒரு மணி நேரம் ஆலோசனை நடத்தினர்.

இந்த சந்திப்பின்போது என்ன பேசப்பட்டது என்பது குறித்து ராமகிருஷ்ணனிடம் கேட்டபோது, கூட்டணி அமைப்பது குறித்து பேச்சு நடத்தினோம். திங்கள்கிழமை மீண்டும் பேசுவோம் என்றார்.

இன்று காலை 2வது பேச்சு

இந்த நிலையில் இன்று காலை தேமுதிக அலுவலகத்திற்கு சிபிஎம் குழுவினர் வந்தனர். 6 பேர் கொண்ட குழுவில் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், டி.கே.ரங்கராஜன் ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

இந்தக் குழுவினர் தேமுதிக குழுவைச் சந்தித்து ஆலோசனைகளைத் தொடங்கினர். விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன், சுதீஷ் உள்ளிட்டோர் தேமுதிக குழுவில் இடம் பெற்றிருந்தனர்.

மாலையில் உடன்பாடு

இன்று காலை நடந்த பேச்சுவார்த்தை விவரங்களை இரு கட்சியினரும் வெளியிடவில்லை. இந்த நிலையில் தேமுதிகவுடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து சிபிஎம் நிர்வாகிகள் கூடிப் பேசி ஆலோசனை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது.

இதுகுறித்து மாலையில், ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் தமிழ்நாடு மாநிலக்குழுக் கூட்டம் சென்னையில் கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எம்.பி., தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் என்.வரதராஜன், உ.வாசுகி மற்றும் மாநில செயற்குழு, மாநிலக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தமிழகத்தில் 2011 ஏப்ரலில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் அஇதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி மார்க்சிஸ்ட் கட்சி போட்டியிட்டது. தேர்தலில் அஇஅதிமுக அமோக வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை ஏற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 10 இடங்களில் வெற்றிபெற்று ஆக்கபூர்வமான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது.

தற்போது நடைபெற உள்ள உள்ளாட்சிமன்றத் தேர்தலில் அஇஅதிமுகவுடன் தொகுதி உடன்பாடு ஏற்படுத்தி போட்டியிடுவது என்று கட்சியின் மாநிலக்குழு முடிவு செய்த அடிப்படையில் அஇஅதிமுக தலைமையுடன் உள்ளாட்சி மன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தையை நடத்தியது.

பேச்சுவார்த்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும் போதே அஇஅதிமுக தலைமை தன்னிச்சையாக வேட்பாளர் பட்டியலை அறிவித்தது. அஇஅதிமுகவின் தன்னிச்சையான வேட்பாளர் பட்டியல் அறிவிப்பிற்கு மார்க்சிஸ்ட் கட்சி தனது ஆட்சேபணையை தெரிவித்து அஇஅதிமுக தலைமைக்கு கடிதம் அனுப்பியதோடு தொலைபேசியிலும் ஆட்சேபனையை தெரிவித்தது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஆட்சேபனையை அதிமுக சிறிதும் கருத்தில் கொள்ளாமல் தங்கள் கட்சியின் வேட்பாளர்கள் பட்டியலை தொடர்ந்து தன்னிச்சையாக அறிவித்துக் கொண்டே இருந்தது. பேச்சுவார்த்தை தர்மம் குறித்து அதிமுக தலைமை கவலைப்படவில்லை.

எனினும் உடன்பாடு காண மார்க்சிஸ்ட் கட்சி பேச்சுவார்த்தையை தொடர்ந்தது. ஆனால் அஇஅதிமுக தலைமை மார்க்சிஸ்ட் கட்சியின் பலத்திற்கு ஏற்ப இடங்களை ஒதுக்கீடு செய்ய முன்வரவில்லை. 2006 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சி வெற்றி பெற்ற இடங்களைக் கூட ஒதுக்கீடு செய்ய அஇஅதிமுக தலைமை மறுத்தது. இந்த அணுகுமுறை மார்க்சிஸ்ட் கட்சியுடன் பொருத்தமான உடன்பாட்டிற்கு வர அஇஅதிமுக தலைமை தயாரில்லை என்பதையே உணர்த்தியது.

இந்நிலையில் மார்க்சிஸ்ட் கட்சி நடைபெற்றவுள்ள உள்ளாட்சித் தேர்தலை இடதுசாரி மற்றும் இதர ஜனநாயக கட்சிகளோடு இணைந்து சந்திப்பது என தீர்மானித்தது. இதனடிப்படையில் தேமுதிகவுடன் உடன்பாடு காண்பதென கட்சியின் மாநிலக்குழு முடிவெடுத்துள்ளது.

மேலும் காங்கிரஸ், பாஜக, திமுக, அதிமுக அல்லாத இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளையும் தேமுதிக மார்க்சிஸ்ட் கட்சி அணியில் இணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளை மேற்கொள்வதெனவும் கட்சியின் மாநிலக்குழு தீர்மானித்துள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்காலிக பிரிவு?

கடந்த சட்டசபைத் தேர்தலின்போதும் ஜெயலலிதா முரண்டு பிடித்து வந்த நிலையில் விஜயகாந்த்தை சந்தித்து புதிய கூட்டணி குறித்து இந்தத் தலைவர்கள் பேசினர். இதன் பின்னரே ஜெயலலிதா இறங்கி வந்தார் என்பது நினைவிருக்கலாம்.

ஆனால் இந்த முறை எதற்காகவும் இறங்கி வருவதாக இல்லை ஜெயலலிதா. எனவேதான் வேறு வழியில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணிக்கு தீர்மானித்துள்ளது சிபிஎம்.

இந்தக் கூட்டணியில் வேறு எந்தக் கட்சியாவது சேருமா என்பது தெரியவில்லை. ஆனால் சேரும் வாய்ப்புகளை மறுப்பதற்கில்லை என்று கூறப்படுகிறது.

அதேசமயம், ஏதாவது கிடைக்கும் என்ற நம்பிக்கையில், இன்னும் அதிமுகவின் வாசற்படியிலேயே சிபிஐ தவம் இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment