சோமாலியாவில் பஞ்சமும், பட்டினியும் படு வேகமாகப் பரவி வருவதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரப் பிரிவு தலைவர் வெலரி அமோஸ் கூறியுள்ளார்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், உலக நாடுகள் சோமாலியா விவகாரத்தில் உடனடியாக பெருமளவில்உதவிகள், மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகியுள்ளது. இல்லாவிட்டால் சோமாலியாவின் சில பகுதிகளில் நிலவி வரும பஞ்சமும், பட்டினிச் சாவுகளும் நாடு முழுவதும் பரவி விட வாய்ப்புள்ளது.
விரைவிலேயே இந்த பஞ்சம் மேலும் 6 பகுதிகளுக்குப் பரவும் உடனடி அபாயம் உள்ளது. பல ஆயிரக்கணக்கான மக்கள் ஏற்கனவே பஞ்சத்திற்கும், பட்டினிக்கும் பலியாகியுள்ளனர். பல ஆயிரக்கணக்கானோர் உணவு கிடைக்காமல் பரிதவித்து வருகின்றனர்.
கடந்த 60 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு தற்போது பஞ்சம் பெரிதாகியுள்ளது. கிட்டத்தட்ட 10.25 லட்சம் பேர் பஞ்சத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். சோமாலியா மட்டுமல்லாமல் அதன் எல்லைப் புறங்களில் அமைந்துள்ள கென்யா, எத்தியோப்பியா, டிஜிபோதி ஆகியவற்றிலும் பஞ்சம் பரவியுள்ளது.
சோமாலியா நெருக்கடியைத் தீர்க்க ஆப்பிரிக்க யூனியன் நடவடிக்கை எடுக்க முன்வர வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள ஐ.நா. தயாராக உள்ளது என்றார் அவர்.
கற்பழிப்புக்குள்ளாகும் பெண்கள்
இதற்கிடையே, சோமாலியாவிலிருந்து வெளியேறி கென்யாவின் எல்லைப் பகுதியில் உள்ள அகதிகள் முகாம்களில் தஞ்சமடைந்துள்ள சோமாலியாப் பெண்களுக்கு புதிய பிரச்சினை உருவெடுத்துள்ளது. சோமாலியா ராணுவத்திலிருந்து வெளியேறி ஊடுறுவியர்களும், கென்யாவைச் சேர்ந்த சமூக விரோதிகளும் இந்தப் பெண்களை இரவு நேரங்களில் சரமாரியாக கற்பழித்து வருகின்றனராம்.
முகாம்களில் இரவு நேரங்களில் துப்பாக்கி சகிதம் புகும் இந்த சமூக விரோதிகள், பெண்களை பலவந்தமாக பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்துகின்றனர். தங்களது குழந்தைகள் கண் முன்பாகவே பல பெண்கள் கற்பழிக்கப்படும் கொடூரமும் அரங்கேறி வருகிறதாம்.
முகாம்களைக் கண்காணிக்க இரவு நேரங்களில் யாரும் இருப்பதில்லை என்பதால் அதைப் பயன்படுத்தி இந்த பாலியல் சித்திரவதைகள் நடந்து வருவதாக பெண்கள் குமுறுகிறார்கள்.
No comments:
Post a Comment