ஸ்ரீநகர்:வடக்கு கஷ்மீர் நகரமான ஸோப்பாரில் இளைஞர் ஒருவர் போலீஸ் கஸ்டடியில் வைத்து மரணமடைந்தார். க்ரான்க்ஷிவன் என்ற பகுதியை சார்ந்த நாஸிம் ராஷித் என்ற அஞ்சும்(வயது 28) மரணமடைந்த இளைஞராவார். ஒரு வழக்கு தொடர்பாக நாஸிமை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர் சிறப்பு படையினர்.
அதேவேளையில், குற்றவாளிகளுக்கு எதிராக
கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கஷ்மீர் மாநில முதல்வர் உமர்
அப்துல்லாஹ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார். போலீஸ் நடவடிக்கை கடுமையான மனித
உரிமை மீறல் எனவும், இதனை நியாயப்படுத்த இயலாது எனவும் அவர்
தெரிவித்துள்ளார்.
இத்தகைய சம்பவங்கள் மேலும் நிகழாமலிருக்க
சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை போலீஸ் முன்மாதிரியாக தண்டிக்கும் என நம்புவதாக
தெரிவித்துள்ளார் அவர்.
இளைஞரின் மரணச்செய்தியை கேட்டவுடனேயே
ஸோப்பாரில் கடைகள் அடைக்கப்பட்டன. பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக
நகரத்தில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஹூர்ரியத் தலைவர்களான
செய்யத் அலிஷா கிலானி மற்றும் மீர்வாய்ஸ் உமர்ஃபாரூக் உள்பட பல தலைவர்களை
போலீஸ் வீட்டுக்காவலில் வைத்துள்ளது.
கடந்த 2009 மே மாதமும், சிறப்பு படையினர்
கஸ்டடியில் எடுத்த இளைஞர் கொல்லப்பட்டிருந்தார். கடந்த ஆண்டு 17 வயது
சிறுவனை சுட்டுக்கொன்ற போலீஸ் நடவடிக்கையை கண்டித்து கஷ்மீரில் போராட்டம்
வெடித்துக் கிளம்பியது.
போராட்டங்களில் கலந்துக் கொண்ட மக்கள் மீது
போலீஸ்-பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக்கும்
மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.
No comments:
Post a Comment