Wednesday, 15 June 2011

ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவரின் காஸா விஜயம்

கடந்த திங்கட்கிழமை (13.06.2011) ஐரோப்பிய நாடாளுமன்றத் தலைவர் ஜெர்ஸி புஸெக் காஸா மக்களின் வாழ்வியல் நிலைமைகளை நேரில் கண்டறியுமுகமாக உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ளார்.



ஐ.நா.வின் பலஸ்தீன் அகதிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் மையத்தின் கீழ் இயங்கும் செவிப் புலனற்றோர் சங்கத்தையும், காஸாவின் மேற்குப் பகுதியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுவரும் பள்ளிக்கூடங்களையும் பார்வையிடுவதற்காக அவரின் விஜயம் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தது.


2008/2009 ஆம் ஆண்டு காஸா மீது இஸ்ரேல் மேற்கொண்ட அத்துமீறிய ஆக்கிரமிப்பு யுத்தத்தினால் பெருந்தொகையான பலஸ்தீன் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்தனர். காஸாவின் கீழ்க்கட்டுமானப் பணிகள் முற்றாகச் சீர்குலைந்தன. பள்ளிக்கூடங்கள் மட்டுமன்றி ஐ.நா. செயலகக் கட்டிடமும் நிர்மூலமாக்கப்பட்டன. இப்போரில் சர்வதேச சட்டத்தில் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகள் பயன்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


திரு. ஜெர்ஸி புஸெக், சுமார் ஐந்து வருடங்களுக்கும் மேலாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகாரசபையினால் முற்றுகைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் காஸா பிராந்தியத்தின் உள்ளூர் வர்த்தகர்கள், பலஸ்தீன் மக்கள் பிரதிநிதிகளுடன் மேற்கொண்ட சந்திப்பையடுத்து ஐ.நா.வின் பலஸ்தீன் அகதிகளுக்கான புனர்வாழ்வுப் பணிகள் மையத்தின் ஆளுநர் நாயகம் ஃபிலிப்போ கிராண்டியையும் சந்தித்து உரையாடியுள்ளார்.

No comments:

Post a Comment