Wednesday, 15 June 2011

பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு: "தத்கால்' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

சென்னை,ஜூன் 13: எஸ்.எஸ்.எல்.சி மற்றும் ஓ.எஸ்.எல்.சி. சிறப்பு துணைத் தேர்வுக்கு உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம்.


இது குறித்து அரசு தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:


ஜூன், ஜூலை 2011-ல் நடைபெறவுள்ள இந்தத் தேர்வுக்கு அறிவிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்காமல் இருப்பவர்கள், உடனடி அனுமதி திட்டத்தின் கீழ் ஜூன் 20-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதிகபட்சம் மூன்று பாடங்கள் வரை தேர்ச்சி பெறாதவர்கள் மட்டுமே இந்த சிறப்பு துணைப் பொதுத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.


ஒன்று முதல் மூன்று பாடங்களுக்கான தேர்வுக்கான கட்டணம் ரூ. 625 ஆகும். தேர்வுக் கட்டணத்தை தேசியமயாக்கப்பட்ட வங்கியில் அரசுத் தேர்வுகள் இயக்குநர், சென்னை-6 என்ற பெயருக்கு சென்னையில் மாற்றத்தக்க வகையில் வங்கி வரைவோலை எடுத்து விண்ணப்பப்படிவத்தை நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.


விநியோகிக்கும் இடங்கள்: திருநெல்வேலி, மதுரை, கோவை, திருச்சி, கடலூர், வேலூர் மற்றும் சென்னையிலுள்ள அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகங்கள், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர் அலுவலகங்கள் ஆகிய இடங்களில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்பிக்க வேண்டிய கடைசி நாள் ஜூன் 22 ஆகும்.


தனித்தேர்வர்கள் கவனிக்க... தனித்தேர்வர்கள் பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அரசுத் தேர்வுகள் மண்டல துணை இயக்குநர் அலுவலகத்தில் நேரில் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும்.


விண்ணப்பம் மற்றும் நுழைவுச் சீட்டில் ஒட்டப்படும் தேர்வரின் புகைப்படத்தில், ஏற்கெனவே பயின்ற பள்ளியின் தலைமையாசிரியரிடம் மட்டுமே சான்றொப்பம் பெறுதல் வேண்டும்.


தேர்வு மையம்: பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும்போது இத்திட்டதின் கீழ் விண்ணப்பிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் அவை பரிசீலனை செய்யப்பட்டு, பதிவெண் மற்றும் தேர்வு மையம் குறித்த தகவல், தேர்வுக் கூட அனுமதிச்சீட்டு ஆகியவை அன்றே வழங்கப்படும்.

No comments:

Post a Comment