Tuesday 7 June 2011

இஸ்லாமிய உடையில் கால்பந்து ஆட ஈரான் மகளிர் அணிக்கு தடை


டெஹ்ரான்:இஸ்லாமிய உடையில் கால்பந்து போட்டியில் கலந்துக்கொள்ள களமிறங்கிய மகளிர் அணியினருக்கு தடை விதித்த நடவடிக்கைக்கு எதிராக ஈரான் ஃபிஃபாவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.

ஒலிம்பிக் தகுதிச்சுற்றுப்போட்டி ஜோர்டானின் தலைநகர் அம்மானில் நடைபெற்றது.கடந்த வெள்ளிக்கிழமை நடந்த போட்டியில் ஜோர்டான் அணிக்கு எதிராக ஆடுவதற்கு ஈரான் கால்பந்தாட்ட மகளிர் அணியினர் கண்ணியமிக்க இஸ்லாமிய ஆடையை அணிந்தவாறு களமிறங்கினர். அப்பொழுது போட்டியை நடத்தும் அதிகாரிகள் அவர்களுக்கு ஆடுவதற்கு தடை விதித்தனர்.


இதனால் எதிர் அணியினருக்கு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதனைத்தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை வியட்நாம் அணிக்கு எதிராக ஆட இருந்த போட்டியிலும் ஈரான் அணிக்கு கலந்துக்கொள்ள இயலாது போனது.

மத-அரசியல் கலாச்சார ஆடைகளை அணிந்துக்கொண்டு வீரர்களோ, அதிகாரிகளோ மைதானத்தில் இறங்கக்கூடாது என ஃபிஃபா சட்டத்தின் பின்னணியில் பஹ்ரைன் போட்டி அதிகாரிகள் ஈரானுக்கு வாய்ப்பை மறுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதமும் இதே காரணத்தைக்கூறி ஈரான் அணிக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது. ஆனால், ஃபிஃபாவின் கட்டளையின்படி ஆடையில் சில மாற்றங்களை ஏற்படுத்தி களத்தில் ஆட இறங்கியதாக ஈரான் கால்பந்து ஃபெடரேசன் தலைவர் அலி கஃபாஷியான் தெரிவித்துள்ளார். இதற்கு ஃபிஃபா தலைவர் ஸெப் ப்ளாஸ்டர் அனுமதி அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் பஹ்ரைன் அதிகாரிகள் அரசியல் விரோதத்தின் காரணமாக ஈரான் அணிக்கு தடை ஏற்படுத்தியதாக ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.பஹ்ரைனில் ஜனநாயக எழுச்சிப்போராட்டத்தை ஈரான் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment