Thursday 30 June 2011

வடகொரியாவில் அவலம்: புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்

வடகொரியாவில் ரேஷனில் வழங்கும் உணவுப் பொருட்கள் குறைக்கப்பட்டுள்ளதால் அந்நாட்டு மக்களில் ஒரு பகுதியினர் புற்களை சாப்பிட்டு உயிர் வாழும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.


வடகொரியாவில் ஏழைகள் என கருதப்படும் 23 லட்சம் மக்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இவர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளாக உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில் தற்போது ஒருவருக்கு ஒரு நாளைக்கு வழங்கப்படும் ரேஷன் பொருட்களின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் உண்ண உணவின்றி இம்மக்கள் புற்களை உண்டு உயிர் வாழ்கின்றனர்.

இதுகுறித்து வடகொரியாவின் பயோங்யாங்கில் உள்ள வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்பு அலுவலகத்திற்கான சுவிஸ் ஏஜன்சி கதரினா ஜெல்வெஜர் கூறியதாவது: வடகொரியாவில் ஏழைத் தொழிலாளர்களுக்கு ரேஷனில் உணவுப் பொருட்கள் வழங்கப்படுகின்றன.

ஆனால் நாட்டிற்கு கிடைத்து வந்த நன்கொடைகள் குறைந்து சர்வதேச அளவில் விலைவாசி மற்றும் இறக்குமதி மீதான செலவு அதிகரித்துள்ளதால் ஒரு தொழிலாளருக்கு ஒரு நாளைக்கு ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு 150 கிராமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களாக ரேஷனில் வழங்கப்படும் உணவுப் பொருளின் அளவு பாதியாகக் குறைக்கப்பட்டள்ளதாக எனக்கு தகவல் கிடைத்துள்ளது. அதனால் சில பகுதிகளில் குறிப்பாக மலைப்பகுதிகளில் வசிக்கும் மக்கள் நிலங்களைத் தோண்டி புல் மற்றும் மூலிகை இலைகளை பறித்து சாப்பிட்டு உயிர் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்தாண்டில் குளிர் பருவம் நீடித்ததால் உருளைக்கிழங்கு உற்பத்தி குறைந்துவிட்டது. மேலும் அணு ஆயுத உற்பத்தி தொடர்பாக வடகொரியாவுக்கும், அமெரிக்காவுக்கும் இடையில் விரிசல் ஏற்பட்டுள்ளதால் வெளிநாட்டு உதவிகளும் குறைந்துள்ளன.

கடந்த 2008ம் ஆண்டில் உலக உணவு வழங்கல் திட்டத்தின் கீழ் வடகொரியாவுக்கு 1 லட்சத்து 36 ஆயிரம் டன் உணவு வழங்கப்பட்டது. இது கடந்தாண்டில் 55 ஆயிரம் டன்களாகக் குறைந்தது.

ஆனால் நடப்பு மாதத்தில் வெறும் 11 ஆயிரம் டன் உணவுப் பொருட்கள் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது. உணவுப் பொருட்களைப் பெற தவறான வழிகளில் உணவு உதவியை பயன்படுத்த மாட்டோம் என்று வடகொரியா உறுதியளிக்க வேண்டும் என்றும் அமெரிக்கா வலியுறுத்தி வருகிறது.

மேலும் வடகொரியாவுக்கு வழங்கப்பட்டு வந்த 3 லட்சத்து 50 ஆயிரம் டன் உரமும் கடந்த 2007ம் ஆண்டில் இருந்து நிறுத்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment